Total Pageviews

Friday, 11 November 2011

தலை சுற்றும் கணக்கு !!!! நமக்கு இது தேவைதானா?

ரஷிய நாட்டின் உதவியோடு தமிழகத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணுமின் நிலையத்தின் பணிகள் இப்போது மக்கள் சக்தியால் சற்று முடங்கிக் கிடக்கின்றன.1992-ம் ஆண்டு நடைபெற்ற தென்மாநில முதல்வர்களின் மாநாட்டில் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்க ஒத்துக்கொண்டதுடன், அங்கு உற்பத்தியாகும் மின்சக்தியைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளவும் முடிவு செய்ததுதான் தமிழகம் செய்த முதல் தவறு.

ஆந்திர மாநிலம் நாகார்ஜூனசாகர் மற்றும் கேரள மாநிலம் பூதான்கெட்டு பகுதிகளில் நிறுவப்பட உத்தேசிக்கப்பட்ட ஒரு பெரிய திட்டம், அம்மாநில மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பால் இடம்பெயர்ந்து தமிழகக் கரையோரமான கூடங்குளத்தில் நிலைகொண்டு, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. தத்தமது மாநிலங்களில் அணுமின் நிலையத்தை நிறுவ எதிர்ப்புத் தெரிவித்த கேரளம், ஆந்திரம், கர்நாடக அரசுகள், அணுமின் நிலையம் அமைப்பதற்காக தமிழகத்தைக் கைகாட்டிவிட்டு ஒதுங்கிக் கொண்டதில் இருந்தே அந்த மாநிலங்களின் ராஜதந்திரம் புரியும்.உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் மின்சக்தியில் சுமார் 4 சதவிகிதம் மட்டுமே அணுமின் நிலையத்தின் மூலம் பெறப்படுகிறது என்ற நிலையில் இதுபோன்ற அணுமின் நிலையங்கள் தேவைதானா என்ற குரல் உலகம் முழுவதுமே மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

கடற்கரையோரம் நிறுவப்படும் அணுமின் நிலைய உலைகளைக் குளிர்விக்கும், கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பு அகற்றும் ஆலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகளையும் கடலில் கொட்ட வேண்டிய நிலையில் கடல் வளம் பாதிக்கப்படாதா?கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத் தொடங்கும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் உவரி முதல் கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் வரையுள்ள கடலோரக் கிராமங்களிலுள்ள மீனவர்களின் நிலை என்ன?கடலில் கலக்கும் கதிர்வீச்சு கழிவுகளால் மீன் உள்ளிட்ட கடல் வளங்கள் பாதிக்கப்படும் நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரம் நிச்சயம் பாதிக்கும்.மேலும் இந்த அணுமின் நிலையத்துக்குத் தேவைப்படும் தண்ணீர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அணையிலிருந்து கொண்டு வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்குப் போதிய தண்ணீர் வசதி கிடைக்காத நிலையில் விவசாயமும் பாழாகும்.

அணுஉலைக் கழிவுகளிலிருந்துதான், அணு ஆயுதம் தயாரிக்க உதவும் புளுட்டோனியம் பெறப்படுகிறது.கல்பாக்கம், தாராப்பூர் ஆகிய அணுமின் நிலையங்களிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 1,000 கிலோ புளுட்டோனியம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு ஸ்பூன் புளுட்டோனியம் 300 கோடி பேருக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் என்கிறது ஆய்வு.அப்படி என்றால் 1,000 கிலோ புளுட்டோனியம் மூலம் என்னவெல்லாம் நடக்கும்? கணக்குப் பார்த்தால் தலை சுற்றுகிறது.இப்படி பல்வகை பிரச்னைகளை ஏற்படுத்தும் அணுஉலைக் கழிவுகளை எங்கே கொண்டு போய்ச் சேர்ப்பது என்பது மிக முக்கியமான விஷயம்.

கூடங்குளம் அணுமின் நிலையம் ஆண்டுக்கு 30 டன் யுரேனியத்தைப் பயன்படுத்தும் நிலையில் சுமார் 20 ஆண்டுகள் உலை இயங்கும் நிலையில் சுமார் 600 டன் கழிவு வெளியாகக் கூடும். இந்தக் கழிவை நாம் பாதுகாப்பாக பல ஆயிரம் ஆண்டுகள் வரை வைத்திருக்க வேண்டும். இது இயலுமா?இந்தக் கழிவுகளால் கடல் நீர் மாசடையும். மேலும் அணு உலையிலிருந்து வெளியாகும் நீராவி, புகை வடிவிலான கழிவுகள் மனிதனின் வியர்வை, சுவாசம் என ஒவ்வோர் அணுவிலும் புகுந்து அணுவின்றி எதுவும் அசையாது என்ற சொல்லுக்கு வலு சேர்ப்பதுபோல் உடலின் ஒவ்வொரு மூலக்கூற்றினையும் துவம்சம் செய்யாதா?

இதையும் தாண்டிச் சிந்தித்தால், உலையில் வெடிப்பு ஏற்பட்டால், சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதன் பாதிப்பு இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அப்படி என்றால் அதன் பாதிப்பு கேரள மாநில எல்லை முதல் மதுரை வரை இருக்குமே. இந்த பரந்து விரிந்த பகுதிகளில் வாழும் மக்கள், கால்நடைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள், விவசாய நிலங்கள் அனைத்தையும் பாதுகாப்பது என்பது அரசுகளால் சாத்தியமாகக்கூடிய விஷயமா என்றால் நிச்சயம் இல்லை.விஞ்ஞானத்தில் வளர்ந்த ஜெர்மனி போன்ற நாடுகளே அணுமின் திட்டங்களை முடக்குவதற்கு உத்தேசித்துள்ள நிலையில் வளர முயன்று வரும் இந்தியாவுக்கு, நமக்கு இது தேவைதானா?

திசையெட்டுமா தமிழ் படைப்பு?


பாரதியும் தாகூரும் மகாகவிஞர்கள். ஆனால், தாகூருக்குக் கிடைத்த பெருமையும் அங்கீகாரமும் பாரதிக்குக் கிடைக்காமற் போனதற்கு என்ன காரணம்? இன்றுவரை பாரதியின் மொத்த படைப்புகள் ஆங்கிலத்தில் முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை.

பாரதியின் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழகத்தைக் கடந்து இந்தியா முழுக்கவோ, உலகம் முழுக்கவோ இதுவரை செல்லவில்லை. தாகூருக்குக் கிடைத்த உயரம் அவர் உலக மொழிகளிலெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டதுதான். பாரதிக்கு இதுவரை இப்பேறு கிடைக்கவில்லை.

தமிழின் பெருமையை உணர்ந்த பிறநாட்டு அறிஞர்கள்தான் தமிழை உலக நாடுகளுக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஜி.யு. போப் திருக்குறளையும் திருவாசகத்தையும் மொழிபெயர்த்தார்.

பைபிளுக்கு அடுத்து, காரல் மார்க்ஸின் மூலதனமும் மூன்றாவதாக திருக்குறளும் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டவை என்று கூறுவார்கள். அது உண்மையோ இல்லையோ, உலக மொழிகளுக்குக் கொண்டு செல்ல ஜி.யு. போப் என்ற கிறித்தவப் பாதிரியாரே காரணமாயிருந்தார்.

பெஸ்கி என்ற வீரமாமுனிவர் திருக்குறளின் அறத்துப்பாலையும் பொருள்பாலையும் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். மாக்ஸ்முல்லர் இந்திய ஆய்வியலைத் தொடங்கிவைத்தார். ராபர்ட் கால்டுவெல் திருநெல்வேலி வரலாற்றையும் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தையும் ஆங்கிலத்தில் எழுதித் தமிழை உலக நாடுகளுக்குக் கொண்டு சென்றார்.

இவர்கள் தொடங்கி தமிழின் செழுமை மேல் ஈர்க்கப்பட்ட ஏராளமான ஐரோப்பியர்கள் தமிழ் இலக்கியத்தை ஆங்கிலத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். இம்முயற்சிகளெல்லாம் 19-ம் நூற்றாண்டு வரை மட்டுமே தீவிரமாக நடைபெற்றன.

ஏ.கே. ராமானுஜன் அரிய முயற்சி செய்து சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். நம் பழந்தமிழ் இலக்கியங்கள் சென்ற அளவுக்குக்கூட இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படவில்லை. தமிழின் முகம் பழைய முகமாய் பல நேரங்களில் வெற்றிடமாய் உள்ளது.

இன்று ஆங்கிலத்தின் ஊடாகவே சகல அங்கீகாரமும் அடையாளங்களும் சாத்தியமாகின்றன. வட்டார மொழியில் எழுதப்படும் மிகச்சிறந்த இலக்கியங்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்போதே கவனிப்புக்கு உள்ளாகின்றன. உதாரணத்துக்கு இன்று உலகம் முழுவதும் அறியப்படுகின்ற ஆப்பிரிக்க இலக்கியத்தைக் கூறலாம்.

ஆங்கிலம் தரும் அங்கீகாரம் பெரும் விவாதங்களையும் கிளப்புகிறது. சொந்த மண்ணைவிட்டு, பிழைப்புக்காக பலகாலமாய் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள் மண்ணைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். அதற்குப் பேரளவு அங்கீகாரமும் பொருளாதாரப் பலனும் உடனடியாகக் கிடைக்கின்றன. ஆனால், சொந்த மண்ணிலேயே வாழ்ந்துகொண்டு, அந்த மண் தரும் ஏற்ற இறக்கங்களைத் தாங்கிக்கொண்டு, அந்த மண் பற்றி எழுதும் எழுத்தாளர்களுக்குக் கவனிப்பும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை. ஆர்.கே. நாராயணனின் மால்குடி நாள்களும், தி.ஜா.வின் காவிரி மண் பற்றிய பல நாவல்களுக்கும் இடையில் உள்ள அங்கீகார பேதம் இதற்கு ஓர் உதாரணம்.

சென்ற ஆண்டு தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் எழுத்தாளர்களின் சந்திப்பில், விவாதத்தின் மையப் புள்ளியாக இக்கருத்தே அமைந்தது. வட்டார வாழ்வியலைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர்கள் பெரும் புகழைச் சம்பாதிக்கின்றனர்.

குறிப்பாக சொந்த நாட்டில் வசிக்க நேராது; வெளிநாடுகளில் வாழும் ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர்கள் எழுத்தின் மூலம் உலகச் சந்தையில் முன்னணி எழுத்தாளர்களாக அணிவகுக்கின்றனர்.

அதேநேரத்தில், தமிழ்நாட்டில் வாழும் ஒரு படைப்பாளி தன்னை நிலை நிறுத்திக்கொள்ள மூன்று விதமான போராட்டங்களில் சிக்கித் தவிக்க வேண்டியிருக்கிறது. ஒன்று - தன் படைப்பை மொழிபெயர்ப்பின் மூலமாக ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளுக்குக் கொண்டு செல்வது; இரண்டு - தன் நாட்டில் உள்ள பிறமொழி இலக்கியவாதிகளுடன் ஒப்பிட்டு தன் இடத்தை நிலைநாட்டுவது; மூன்று - உலகளாவிய எழுத்துச் சந்தையைச் சென்றடைவது.

காலத்தின் கோலத்தால் மேற்குறிப்பிட்ட மூன்றுமே ஒரு தமிழ் எழுத்தாளருக்கு அவர் வாழும் காலத்திலும் அவருக்குப் பின்னாலும் கிடைப்பதில்லை. பாரதி தொடங்கி இன்றைக்குள்ள எழுத்தாளர்கள் வரை இதுவே பலவீனம்.

இந்திய இலக்கியங்கள் குறித்து நடைபெறும் கலந்துரையாடல்களில் தமிழ் இலக்கியத்துக்குப் போதுமான அளவு முக்கியத்துவமோ, பங்களிப்போ இருப்பதில்லை. தமிழ் இலக்கியத்தின் சமகாலப் போக்குகள் குறித்து தெளிவான பார்வையோ, புரிதலோ, இந்தியாவில் உள்ள பிறமொழி இலக்கியகர்த்தாக்களுக்கும் வாசகர்களுக்கும் இல்லை. ஐம்பதாண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் எழுத்தாளர்களையே அவர்கள் அறிந்துள்ளனர்.

காமன்வெல்த் எழுத்தாளர் சந்திப்பில்கூட நா. பார்த்தசாரதி, அகிலன், கல்கி, கடைசியாக புதுமைப்பித்தன் ஆகியோரே முன்வைத்துப் பேசப்பட்டனர். தமிழ் மட்டும் இந்திய இலக்கியத்தில் தனித்தீவாக இயங்கக் காரணமென்ன?

கடந்த பத்தாண்டுகளில் எழுத வந்த மலையாள, கன்னட எழுத்தாளர்கள் பெயர்களை இந்தியா முழுக்க அறிந்துள்ளனர். ஆனால், தமிழ் எழுத்தாளர்கள் அறியப்படாதது ஏன்?

என்னால் புரிந்துகொள்ளக் கூடிய காரணங்களில் சில: தமிழகம் தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் மாநில மொழியோடு இந்தியும், ஆங்கிலமும் உள்ளன. மாநில மொழியில் வெளியாகும் படைப்புகள் உடனடியாக இந்திக்கு, ஆங்கிலத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இந்தியின் வழி மொத்த இந்தியாவையும் அப்படைப்பு சென்றடைகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் முண்டா இனப்போராட்டத்தைப் பற்றிய பாடலுடன் ஆந்திரத்தின் தெலங்கானாப் பகுதி படைப்பாளி தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டு வரவேற்க முடிகிறது. சமகால இலக்கியக் கோட்பாடுகளை அவர்கள் ஒருவருக்கொருவர் நன்றாக அறிந்து கொள்கின்றனர். இந்தி வழி நம் படைப்புகள் செல்வது அறவே இல்லை அல்லது மிக அரிது.

அடுத்து மொழியாக்கங்கள் பெரும்பாலும் கல்வி நிறுவனங்களையும் பிற அமைப்புகளையும் சார்ந்துள்ளன. பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் உள்ளவர்கள் இலக்கியப் போக்கின் சமகாலப் போக்குகளை அறிந்திராதவர்கள். பலருக்குக் கோபம் வந்தாலும் 90 சதவீதம் உண்மை இதுவே.

குறிப்பாக, ஆங்கிலப் பேராசிரியர்களுக்குத் தமிழின் இலக்கியப் போக்குகள் குறித்து கொஞ்சமும் தெரியவில்லை. ஆங்கில இலக்கியத்தின் ருசியை மட்டுமே சுவைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் பேராசிரியர்கள், தமிழ் இலக்கியத்தை ஆங்கில மொழிக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சிகளை மேற்கொள்வதேயில்லை.

இன்று தமிழில் நடைபெறும் அரிய முயற்சிகள் தனி நபர்களாலேயே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. பிற மாநிலங்களில் நடைபெறும் இலக்கிய ஆய்வரங்குகள், கருத்தரங்குகளுக்குக் கல்வியாளர்கள்தான் அழைக்கப்படுகிறார்கள். கல்வியாளர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் ஏழாம் பொருத்தம்.

கன்னடத்தைப் போன்றோ, மலையாளத்தைப் போன்றோ தமிழில் இருவரும் ஒருசேரப் பயணித்ததேயில்லை. பல பல்கலைக்கழகங்களின் தமிழிலக்கிய பாடங்கள் சமகாலத்தவையாக இருப்பதுமில்லை.

நமக்கு நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களின் எழுத்துகள் உடனுக்குடன் தமிழில் கிடைக்கின்றன. இந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் வெளியானவுடன் மொழிபெயர்க்கப்படுகின்றன. ஆனால், நம்முடைய புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், ஜெயகாந்தன், ராஜம் கிருஷ்ணன், ஆர். சூடாமணி, பிரபஞ்சன், பெருமாள்முருகன், ஜெயமோகன், எஸ். இராமகிருஷ்ணன், அழகிய பெரியவன், சு. வேணுகோபால், சு. தமிழ்ச்செல்வி, சு. வெங்கடேசன் உள்ளிட்ட படைப்பாளிகள் எப்பொழுது இந்தியத்தை, உலகத்தை அடைவது? தம்மின் அங்கீகாரத்துக்காகப் படைப்பாளியையே வழி தேடச் சொல்வது பெருத்த சமூக அவமானம்.

தமிழுக்கென்று தனி சாகித்ய அகாதெமி கொண்டு வர முடியாதது தமிழின் பலவீனம் அல்ல; தமிழர்களின் பலவீனம். தமிழ் சாகித்ய அகாதெமி அமையுமானால், தமிழ் படைப்பாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதோடு, தமிழ் மொழிபெயர்ப்புக்கென்று சிறப்பாகச் செயல்படும் நிறுவனமாக அந்நிறுவனத்தை அமைக்க முடியும்.

மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மையம் மைசூரிலிருந்து இடம்பெயர்ந்து சென்னையில் செயல்படத் தொடங்கியிருக்கிறது. தமிழாய்வுப் பணிகளைச் சிறப்பாகச் செய்யும் அந்நிறுவனம், தமிழின் அரிய நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிடுகிறது. பழந்தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பை ஊக்குவிக்கும் இந்நிறுவனம் சமகால இலக்கிய மொழிபெயர்ப்புப் பணியிலும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். மொழிபெயர்ப்பில் ஈடுபடுகின்ற தனிநபர்களுக்கு நிதியுதவி தந்து ஊக்கப்படுத்தலாம்.

ஆந்திர மாநிலம் குப்பத்தில் செயல்படும் திராவிடப் பல்கலைக்கழகம், தென்னிந்திய மொழிகளில் மொழிபெயர்ப்புகளை அதிகப்படுத்தலாம். குறைந்தபட்சம் தென்னிந்திய மொழிகளின் இலக்கியப் பரிவர்த்தனைகளை மட்டுமாவது உறுதிசெய்ய முடியும். திராவிடமொழி சார்ந்து ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அரசு இப்பணியைச் செய்ய முன்வர வேண்டும். பள்ளிக்கல்வித்துறை, பாடநூல் நிறுவனம் போன்ற கல்விசார்ந்த பணிகளை முன்னெடுக்கும் அரசு, இலக்கியத்துக்காகவும், மொழிபெயர்ப்புக்காகவும் ஒரு தனித்துறையை உருவாக்கலாம். 1960-கள் தொடங்கி 1980-கள் வரை தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் தமிழிலக்கியம், வரலாறு சார்ந்து வெளியிட்டுள்ள 700-க்கும் அதிகமான நூல்கள் இன்றும் பாராட்டுக்குரியவை. தமிழ் இலக்கியத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்பவை.

அரசின் இலக்கியத்துறை அமையும்போது, படைப்பாளிகள், மொழிபெயர்ப்பாளர்களுக்கான ஆதரவும், நிதியுதவியும் பெருமளவில் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அரசு தன் மொழி வளர்ச்சிக்காகப் படைப்பாளிகள் பின்நிற்கும்போது கிடைக்கும் ஆன்ம பலம் மிகப் பெரியது.

அதியமான் தனக்குக் கிடைத்த அரிய நெல்லிக்கனியை ஒüவைக்குக் கொடுக்கவே முன் வந்தான். ஒüவையை மரணத்திலிருந்து காப்பது மட்டுமல்ல, அதியமானின் நோக்கம். மரணத்தை வெல்லும் பெரும் படைப்புகளை ஒüவை படைக்க வேண்டும் என்ற பேரவாதான் காரணம். படைப்பை வாழவைப்பதே படைப்பாளியை வாழவைப்பது. படைப்பைத் திசையெட்டும் உள்ள வாசகனுக்குக் கொண்டு செல்வதே படைப்பாளியை நித்தியத்துவம் பெற வைக்கும் வழியாகும். அதியமான் கை நெல்லிக்கனியை அரசு கைக்கொள்ளுமா?

Saturday, 5 November 2011

இந்தியாவின் அரசியல் பொருளாதாரம்

ந்தியாவில் ஆங்கிலேயர்கள் வரும்போது பல்வேறு வகையான விவசாய முறைகள் இருந்தன. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நிலவரி வசூல் செய்வதற்கான உரிமையை ஏலம் விட்டனர். ஏலத்தில் பல இடங்களில் நிலவரி வசூல் செய்யும் போது, வரி செலுத்த முடியாத விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்றினர். இது நம்முடைய பாரம்பரியத்தில் இல்லாத ஒன்று. ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இங்கு ஓர் அரசு இருந்தது.

அந்த அரசு நிலவரி விதித்தது. அந்த வரியை ஜமீன்தாரர்கள் வசூலித்தார்கள். அதில் சிறு பகுதி ஜமீன்தார்களுக்கும், பெரும்பகுதி அரசுகளுக்கும் சென்றது. அந்த வரியை வைத்து நகரங்களில் தொழில்களைத் தொடங்கினர். காலனிய ஆட்சி யில் உறிஞ்சப்பட்ட உபரி இங்கிலாந்தின் முத லாளித்துவ வளர்ச்சிக்கு உதவியது. இந்தியாவில் உறிஞ்சப்பட்ட உபரி பத்து சதவீதமாக இருக் கலாம் என்று கூறுகின்றனர். இந்தப் பத்து சதவீதம் என்பது பிரிட்டனின் மூலதனத்தில் மூன்று சதவீதமாக இருக்கலாம்.

இந்த மூன்று சதவீதம் என்பது அன்றைய பிரிட்டிஷில் கணிசமான பங்கு ஆகும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் பேசும்போது காலனி ஆதிக்கத் தைப் பற்றி கூறும்போது இருபெரும் நாகரீகங்கள் சந்தித்துக் கொண்டது என்று சொன்னார். இது ஓர் ஈனமான செயல் என்றே சொல்ல வேண்டும். அடிமை மனப்பான்மையைக் காட்டக்கூடிய செயல் அல்லவா இது. வரிவசூல் செய்யக்கூடிய ஜமீன் தார்களை புதிய முதலாளிகளாக பிரிட்டிஷ் முதலாளி வர்க்கம் உருவாக்கியது. பிரிட்டிஷ் தொழில் வளர்ச்சிக்கு தேவையான வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய வகையிலே வேளாண் உற்பத்திகளை இங்கு மாற்றி அமைத் தது. உணவுப் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பணப்பயிரை பயிரிடுமாறு ஆங்கிலேய அரசாங்கம் அழுத்தம் கொடுத்தது. இதனால் விவசாயம், வணிகமயம் ஆகியது. ஆங்கிலேயர்கள் வரும்போது நிலமற்ற விவசாயி கள் இருந்தார்கள். அதற்கு முன்னாலும் இருந்தார் கள். ஏனெனில் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கு நிலம் கிடையாது. ஆங்கிலேயர்கள் நிலப் பிரபுகளுக்கு ஆதரவாகவும் இருந்தனர். நிலப் பிரபுக்கள் ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந் தனர் என்பது நமக்கு வரலாற்றில் தெரியும்

. காலனிய ஆட்சியில் இங்குள்ள ஏராளமான தொழில்துறைகள் அழிக்கப்பட்டன. அவர் களுடைய மலிவான பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்தனர். இதனால் பெரும் பாலான மக்கள் நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு புலம் பெயர்ந்தனர். விடுதலைக்கு முந்தைய ஆண்டுகளில் உணவு உற்பத்தி அரைசதம் கூட அதிகரிக்கவில்லை. அதே காலக்கட்டத்தில் மக்கள்தொகை 1 சதவீதம் அதிகரித்தது. இதனால் தலா உற்பத்தி குறைந்து கொண்டே வந்தது. விடுதலைக்கு பின்பு ஓர் எல்லைக்கு உட்பட்டு நிலச்சீர்திருத்தங்கள் செயல்பட்டன. அரசு மின்சாரம் உள்ளிட்ட கட்டமைப்பு துறைகளில் முதலீடு செய்தது. பாசனத்தை பெருக்கிற்று. ஐந்தாண்டு திட்டங்கள் வந்தன. பல்நோக்கு திட்டங்கள் வந்தன. இவற்றின் விளைவாக விவசாயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதன் பிறகு பசுமைப் புரட்சி வந்தது. இந்தப் பசுமை புரட்சியால் உற்பத்தித்திறனை அதிகப்படுத்தி மகசூல் அதிகம் பெறப்பட்டது. 1950 முதல் 1990 வரை இந்திய நாட்டில் முதலாளித்துவ வளர்ச்சியின் ஒரு பகுதியாக விவசாயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது என்பது உண்மை. தேசிய அளவிலான தானிய உற்பத்தி என்பது மக்கள் தொகை வளர்ச்சியை விட உயர்ந்தது.

60-களில் நம்முடைய தானிய உற்பத்தி குறைவாக இருந்தது. வாங்கும் சக்தியும் குறைவாக இருந்தது. அதனால் தானியங்களை இறக்குமதி செய்தோம். அயல்நாட்டு கொள்கையில் சுயேச்சையான கொள்கையை கடைப்பிடிக்க முடியாமல் இருந்தது. அப்போது அமெரிக்கா வியட்நாமில் போர் செய்து கொண்டிருந்தது. இந்தியாவில் அதைக் கண்டிக்க முடியவில்லை. ஏனெனில் அமெரிக்காவில் இருந்து உணவுப் பொருட்கள் கப்பலில் வரும் என்று காத்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பின்னணியில்தான் பசுமைப்புரட்சியைப் பற்றி முடிவுகள் எடுக்கப்பட் டது. விவசாயத்தின் நிலஉறவுகளை மாற்றாமல், அங் குள்ள பெரும் விவசாயிகளை மையப்படுத்தி, அவர்களுக்கு மானியம் கொடுத்து, நவீன உற்பத்தி முறைகளை பயன்படுத்தி, மகசூலை அதிகம் பெறுவது, பிறகு அவர்களைப் பார்த்து மற்றவர்களையும் பின்பற்ற வைப்பது என்பது வலுவானவர்களை முன் வைத்து எடுக்கப்பட்ட யுக்தி என்று சொன்னாலும்கூட புதிய தொழில் நுட்பம், பாசனம், உயர் மகசூல் விதைகள், பூச்சி மருந்துகள், வேதியியல் உரம் உள்ளிட்ட ஒரு நவீன உற்பத்திமுறையால் மகசூல் உயருகிறது. மகசூல் உயரும்போது சந்தையில் விலை சரியும். இந்த விலைச் சரிவை சரி செய்ய அரசு ஒரு கொள் முதல் அமைப்பை 1964-ஆம் ஆண்டில் உருவாக் கியது. இதன் மூலம் தானியங்களை இருப்பு வைக்கவும், திரும்ப விற்கவும், நியாயவிலைக் கடை சென்று கடைகோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்தது.

விவசாயத்திற்கான பொருட்களை வாங்கு வதற்கு கடன் அமைப்பில் மாற்றம் வந்தது. வங்கிகள் நாட்டுடமையாக்கமும் கூட்டுறவு கடன் வசதியும் பெருக்கப்பட்டன என்று அரசு பல முயற்சிகளை முன் நின்று மேற்கொள்ள வேண்டியிருந்தது. கட்டுபடியான விலையைக் கொடுத்து கொள்முதல், விவசாயம் செய்வதற்கு பயிர்க்கடன், நிலமேம்பாட்டு கடன், விவசாயிகள் கற்றுக்கொள்ள விவசாய விரிவாக்க அமைப்பு, விவசாயிகள் சொல்லக்கூடிய பிரச்சனைகளை தேசிய அளவில் எடுத்துச் சென்று தீர்வு சொல்வதற் காக ஓர் ஆராய்ச்சி அமைப்பு, நாடு தழுவிய விநியோக அமைப்பு போன்றவைகள் இல்லாமல் பசுமைப்புரட்சி நடந்திருக்க வாய்ப்பில்லை. பசுமைப்புரட்சி என்பது வெறும் தொழில்நுட்பம் சார்ந்த வி‘யம் இல்லை. அரசு விவசாயத்தில் பங்கு எடுத்து, முதலீடுகளை மேற்கொண்டு,

அமைப்புகளை ஏற்படுத்தி செய்யக்கூடிய வேலை. இந்தியா போன்ற பெரியநாட்டில் சந்தை இதைச் செய்திருக்காது. 60-களில் ஏற்பட்ட பஞ்சத்தால் ஏற்பட்ட நெருக்கடியால் இனி பஞ்சம் வந்தால் மேற்கொள்ள இவ்வாறு செய்யப்பட்டது. இதை ஏன் விரிவாக வலியுறுத்திச் சொல்கிறேன் என்றால் 90-களுக்குப் பிறகு இந்த ஏற்பாடுகள் அழிந்து கொண்டு வருகின்றன. புதியப் பொருளாதாரக் கொள்கையின் கீழ் கடுமையாக பாதிக்கப்பட்ட துறை விவசாயத் துறைதான்.

பதினைந்து ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் கூடியிருப்பதாக அரசு சொல்கிறது. தலா வருமானம் கூடியிருப்பதாக சொல்கிறது. ஆனால் குழந்தைகள் வயதுக்கு ஏற்ற எடை இல்லாமல் குறைவாக இருக்கிறார்கள். இந்த வி‘யத்தில் பங்களாதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளை விட நாம் பின்தங்கி இருக்கிறோம்.

நகர்ப்புறங்களில் கல்வி பெற்று வங்கி, காப்பீடு, நிதித்துறை, தகவல் தொழில்நுட்பம், மருந்து கம்பெனிகளில் வேலை செய்பவர்களை நீங்கள் நடுத்தர வர்க்கம் என்று கூறப்படுகிறது. இவர்களுடைய சிந்தனை எப்போதுமே தொழிலாளிகள் பக்கம் இருக்காது. ஆனால், உலகமயம் வந்த பிறகு நடுத்தர தொழிலாளிகள் மத்தியில் மாற்றம் வந்திருக்கிறது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு உலகமயத்தை ஆதரிக்க வேண்டியதுதான் வேறு வழியில்லை என்று இவர்கள் சொன்னார்கள். இப்போது அதன் தாக்கத்தை உணர்ந்து இருக்கிறார்கள். ஆனால், இதில் மற்றொரு பகுதியினர் 70, 80-களில் நுகர் பொருட்கள் வெளி நாட்டில் கிடைப் பது மாதிரி இங்கு கிடைப்பதில்லை என்று ஆதங்கப் பட்டு சைனா பஜா ரில் கடத்தப்பட்ட பொருட்களையும் வாங்கிக்கொண்டு இருந்தார்கள். உலக மயத் தால் இங்கே பொருட் கள் கிடைக்கிறது என்று திருப்திப்பட்டுக் கொள்கி றார்கள். கம்ப்யூட்டரையும், செல்போனையும் உலகமயத்தின் சாதனையாக இவர்கள் பார்க்கி றார்கள். புதிய தொழில்நுட்பங்கள் உலகமயத்தை சாத்தியப்படுத்தி இருக்கலாம். நிதித்துறை உலகமயத்தை இந்தத் தொழில்நுட்பங்கள் சாத்தியமாக்கியிருக்கின்றன. ஆனால், தொழில் நுட்பம் முன்னேற்றங்கள் என்பது உலகமயம்

அல்ல. நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியினருக்கு உலகமயம் வந்த காலகட்டத்தில் செல், கம்ப் யூட்டர், கலர் டெலிவி‘ன் வந்த காலமும் ஒன்றாக இருப்பதால் ஒருவித பிரம்மை வந்திருக்கிறது. இதை தகர்க்க வேண்டியிருக்கிறது.

உலகமயத்தில் நாடுகளுக்கிடையே உள்ள வணிகத்தையோ, வணிக உறவுகளையோ, மூலதன உறவுகளையோ நாம் மறுக்க வேண்டிய தில்லை. ஆனால், வல்லரசுகளின் மேலாதிக்கத்தில் பன்னாட்டு நிதி மூலதனங்களின் மேலாதிக்கத்தில் நிகழ்கின்ற உலகமயமாக்கல் என்பது ஏழை நாடுகளை சுரண்டுவதை எதிர்க்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் அங்கு தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளுக்கு அயல்நாட்டு மூலதனமும், உள் நாட்டு மூலதனமும் எப்படி செயல்பட வேண்டும் என்று வரைமுறைகளை உருவாக்க உரிமை உண்டு. இவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் உலகமயத்திற்கு கதவுகளைத் திறந்து விடுவது என்பது ஜனநாயகத்தை அவமதிக்கின்ற செயலாகும். அயல்நாட்டு மூலதனத்தை எந்த வரையறையும் இல்லாமல் திறந்து விட்டால் அந்த மூலதனம் வெளியேறிவிடும் என்ற அச்சத் தாலேயே ஆட்சியை நடத்த வேண்டியிருக்கிறது. பட்ஜெட் போடும்போது நிதி அமைச்சர்கள், பன்னாட்டு மூலதனக்காரர்கள் கோபப்படும் அளவிற்கு எதுவும் செய்யக்கூடாது என்றுதான் நினைக்கி றார்கள்.

நடுத்தர வர்க்கத்தின் சிந்தனையில் மாற்றம் என்பது சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சிக்குப் பிறகும்தான் வருகிறது. சீனா போன்ற நாடுகள் மேலை நாடுகளில் உறவு வைத்துக்கொண்டு தொழில் நுட்பங்களைப் பெறுவதும், அந்நிய மூலதனங் களை வரவழைப்பதும் என்று பார்க்கும்போது அவை எங்கிருந்து செய்யப்படுகின்றன என்று பார்க்காமல் உலகமயம் நல்ல வி‘யம். முன்னேற் றத்திற்கு வழிவகை செய்கிறது. ஒன்றிரண்டு கஷ்டங்கள் இருந்தாலும் நல்ல வி‘யம்தான் என்ற கருத்தோட்டத்திற்கு வந்து விடுகிறார்கள். அவர்களுடைய வாழ்நிலைத் தாக்கமும், ஊடகங்களும் இந்தக் கருத்தோட்டத்தை நடுத்தர வர்க்கத்துக்கு கொண்டு வந்தன. உலகமய சூழலில் நிலைமை மாறுகிறபோது ஊடகங்கள் சொன் னாலும் இவர்கள் கேட்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. உதாரணத்திற்கு இன் றைக்குத் தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள்.

வட மாநிலங்களை ஒப்பிடும்போது மனிதவள குறியீடு தமிழகத்தில் நன்றாக உள்ளது. இதில் கேரளா, பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு, மேற்குவங்கம், மகாராஷ்டிரம் என்ற வரிசை உள்ளது. தமிழகத்தில் காலங்காலமாக நடக்கின்ற இயக்கங்களின் விளைவாக இருபெரும் திராவிடக் கட்சிகளின் போட்டியும் இதில் அடங்கியிருக்கின்றன. சமூகநலத் திட்டங்கள் நடைபெறுகின்றன. வறுமைக்கோடு என்ற அளவு இல்லாமல் எல்லோருக்கும் ரே‘னில் அரிசி கிடைக்கிறது. சராசரி கிராம மக்களின் வாழ்நிலை என்பது நிலம், குடிமனைப் பட்டா வைச் சார்ந்தது. இந்த இரண்டையும் அடை வதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. ஏராளமான அந்நிய முதலீடுகள் வருவதாக செய்திகள் வருகின்றன.

அரசு சொல்கிற இந்த முதலீடுகளால் எவ்வளவு பணியிடங்கள் உருவாக்கப்பட்டன? பணியிடங்களின் தன்மை என்ன? பணியிடங்கள் நிரந்தரமானதா? அன்றாட கூலிகளா அல்லது ஒப்பந்தத் தொழிலாளிகளா? என்ற விவரங்கள் எதுவும் கிடையாது. தேசிய புள்ளி விபரங்களை வைத்துப் பார்க்கும்போது தமிழக கிராமப்புறங் களில்தான் நிலமற்றவர்களின் சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. நகர்ப்புறக் கூலி, கிராமப்புறக் கூலி விகிதங்கள் பெருமளவுக்கு முன்னேறவில்லை. என்னுடைய சமீபத்திய ஆய்வில் பீகார், ஜார்க் கண்ட், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ஒரிஸா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மனித வள குறியீடு மிக மோசமாக இருக்கிறது.

ஒரு நாட்டில் உள்ள பணப்புழக்கத்திற்கும், உற்பத்திக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடை யாது. உதாரணத்திற்கு சில கோடி ரூபாய்களை அரசாங்கம் அச்சடித்துக் கொடுக்கிறது. அதற்கு சமமான தங்கம் இருக்கிறது என்பதெல்லாம் கற்பனை. நாம் கொடுக்கிற ரூபாய் நோட்டை வாங்கிக் கொண்டு பொருள் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கம் சட்டம் போட்டிருக்கிறது. பொருள் கொடுக்க முடியாது என்றால் சட்டப்படி தண்டிப்பதற்கு உரிமையுண்டு. அந்தத் தாளில், இந்தத் தாளை கொண்டு வருபவர் களுக்கு இவ்வளவு மதிப்பை தருகிறேன் என்று அச்சடித்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் கையெழுத்திட்டு இருக்கிறார்.

இது ஒரு வாக்குறுதிதான். மக்களிடையே நம்பிக்கை இருக்கிறது. நாம் அந்த தாள்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒரு நேரத்தில் விலைவாசி ஏறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதாவது, கத்தரிக்காய் காலையில் 30 ரூபாயாகவும், மாலையில் 300 ரூபாயாகவும், இரவில் 1000 ரூபாயாகவும் விற்றால் இந்தப் பணம் என்ற தாளை யாருமே பயன்படுத்த மாட்டார்கள். இந்த மனநிலை சமீபத்தில் ஜெர் மனியில் ஏற்பட்டது. இப்போது ஜிம்பாவேயில் ஏற்பட்டிருக்கிறது. இதை அபரிமிதமான பணவீக்கம் என்று சொல்வர். இதற்குக் காரணம் ஏகப்பட்ட நோட்டுக்களை அச்சடித்து உற்பத்தியும் பெரு காமல், இருப்பதால் நாட்டின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை ஏற்படாமல் போகும்.

நாணயத்தின் மதிப்பை நிர்ணயிப்பது என்பது ஏதோ ஓர் ஆண்டை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு சென்ற ஆண்டு நூறு ரூபாய் கொடுத்து என்ன பொருள் வாங்கினோமோ, அதே பொருளை இந்த ஆண்டு நூற்றி இருபது ரூபாய்க்கு வாங்க முடியும் என்றால் பணவீக்கம் இருபது சதவீதம் ஆகும். எனவே ரூபாயின் மதிப்பு குறைகிறது என்று அர்த்தம். ஆகவே ரூபாயின் மதிப்பை குறிப்பிட்ட ஆண்டை வைத்துத்தான் மதிப்பிட முடியும். பண வீக்கம் என்பது விலைவாசி உயர்வின் விகிதம். இப்போது செய்தித்தாள்களில் பணவீக்கம் 15-லிருந்து எட்டு ஆகிவிட்டது. இது சாதனை என்று அரசாங்கம் சொல்கிறது. ஆனால் பொருள்களின் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது. இதனால் பணவீக்கம் குறைந்து இருக்கிறது. ஆனால் விலைவாசி குறையவில்லை. விலைவாசி ரூபாயின் மதிப்பை குறைக்கிறது.

வெளிநாட்டைப் பொறுத்தவரை டாலருக்கு ரூபாயின் மதிப்பு என்ன என்று கேட்கிறோம். இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால் மேலை நாடுகளில் ஏராளமான கடன் பெற்றிருக்க கூடிய நிதி நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்திருந்த பணங்களை எடுத்துச் செல்கின்றன. இதனால் ஏராளமான அந்நிய நாட்டுப் பணங்கள் வெளியேறுகின்றன.

அவர்களிடம் இருக்கிற இந்திய ரூபாய்களை டாலராக மாற்றுகின்றனர். இதனால் டாலருக்கு கிராக்கி கூடுகிறது. ரூபாயின் மதிப்பு சரிகிறது. நாம் இறக்குமதி செய்கிற பொருள் ரூபாய் மதிப்பில் அதிகமாகும். ஆகவே பணவீக்கம் அதிகமாகும்.

சுற்றுச்சுழலின் நண்பர் திம்மக்கா

சுற்றுச்சுழலின் நண்பர் திம்மக்கா

கர்நாடகா மாநிலம் பெங்களுரூவில் இருந்து தும்கூர் போகும் வழியில் 25 வது கிலோமீட்டரில் வருகிறது கூதூர் கிராமம்.
அதுவரை வறண்டு வெப்பமாகக் காணப்பட்ட பூமி குளிர்ந்து காணப்படுகிறது, அதற்கு காரணமான ஆயிரத்திற்கும் அதிகமான ஆலமரங்கள் அழகு காட்டி சாலையின் இருபக்கங்களிலும் இருந்து காற்றை வீசி வரவேற்கிறது. மரங்களில் உள்ள பல்வேறுவித பறவைகள் தங்கள் மொழியால் கீதம் பாடி வரவேற்கின்றன, மொத்தத்தில் மரங்கள் அடர்ந்த அந்த திடீர் சோலைவனம் மனதை சிக்கென பறிக்கிறது.
எங்கும் இல்லாத அளவிற்கு, எங்கு இருந்து வந்தன இத்தனை ஆலமரங்கள், யார் கொண்டுவந்தது நட்டது, அதைவிட யார் இவ்வளவு சிரத்தை எடுத்து பராமரித்தது என்ற பல கேள்விக்கு எல்லாம் விடைதான் , எழுதப்படிக்கத்தெரியாத திம்மக்கா.
யார் இந்த திம்மக்கா என்பதை அறிய சில வருடங்கள் பின்னோக்கி பயணிக்கவேண்டும்
சாதாரண கிராமத்து ஏழைப்பெண்ணான திம்மக்கா வாக்கப்பட்ட கிராமம்தான் கூதூர்.
சிக்கண்ணா என்ற விவசாய தொழிலாளியின் வாழ்க்கைத் துணையான திம்மக்காவிற்கு குழந்தை பாக்கியம் இல்லாது போனது, இதை காரணமாக்காட்டி உற்றமும், சுற்றமும் கொட்டிய வார்த்தைகளால் திம்மக்கா ரொம்பவே காயப்பட்டுவிட்டார். இரவுகளை தூக்கம் இல்லாமலும், பகல்களை உணவு இல்லாமலும் கழித்தார். ஆனாலும் எதுவும் ஆறுதலாக இல்லை மேலும், மேலும் துக்கம் துரத்திட, இப்படியே பத்து வருடங்கள் ஒடிப்போனது. இப்போது 80 வயதாகும் திம்மக்காவிற்கு அப்போது வயது 28.
பெற்று வளர்த்தால்தான் பிள்ளைகளா, உயிரும்,உணர்வும் உள்ள மரங்கள் பிள்ளைகள் இல்லையா, பெற்ற பிள்ளை கூட தாயை மட்டும்தான் கவனிக்கும், ஆனால் பெறாத பிள்ளைகளான மரங்கள், சுயநலமின்றி ஊரையே கவனித்துக்கொள்ளுமே என்றெல்லாம் யோசித்த திம்மக்கா மரம் நடுவது அதுவும் ஆலமரங்களை தொடர்ச்சியாக நடுவது என்று முடிவெடுத்தார்.
இவ்வளவு யோசித்த திம்மக்கா அந்த ஊரின் தண்ணீர் பஞ்சத்தை பற்றி யோசிக்க மறந்துவிட்டார், ஆனாலும் முன்வைத்து காலை பின்வைக்கப்போவது இல்லை என்ற முடிவுடன் நாலு கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று தண்ணீர் கொண்டுவந்து ஆலமரங்களுக்கு தண்ணீர் விட்டார்.
ஆரம்பத்தில் இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று கேலி செய்த கணவர் சிக்கண்ணா கூட ஆலமரசெடி இலைகளும், தலைகளும் விட்டு உருவாகி வருவதைப் பார்த்து தானும் திம்மக்காவிற்கு உதவலானார்.
வயல்காட்டில் வேலை செய்த நேரம் போக எப்போதும் ஆலமரம் நடுவது, நட்ட மரங்களை பேணி பாதுகாத்து வளர்ப்பது, வளர்ந்த மரங்களிடம் அன்பும், பாசமுமாகப் பேசுவது என்று மரங்களை தனது குழந்தைகளுக்கும் மேலாக வளர்த்தார்.
மரங்களை வளர்ப்பதற்காக ஊரில் நிறைய குட்டைகளை உருவாக்கினார், அதில் மழைக்காலத்தில் பெய்யும் தண்ணீரை தேக்கிவைத்து வெய்யில் காலத்தில் மரங்களுக்கு ஊற்றி பயன்படுத்தினார்.
அப்படியும் தண்ணீர் பற்றாமல் போகும்போது சிரமம் பாரமால் தலையிலும், இடுப்பிலும் குடங்களை சுமந்துகொண்டு தண்ணீர் சேகரிக்க புறப்பட்டு விடுவார். ஒரு சமயம் நாலுகிலோ மீட்டர் தூரம் போய் தண்ணீர் கொண்டுவந்தவர், மரங்களுக்கு அருகில் வரும்போது கால் தடுக்கி முள்ளில் விழுந்துவிட்டார். கை,கால்களில் ரத்தம். ஒ...வென்று அழுகை.பதறி ஒடிவந்த சிக்கண்ணா,‘ என்னம்மா ரொம்ப வலிக்குதா’ என்று கேட்டபோது, ‘வலிக்காக அழலீங்க...கொண்டுவந்த தண்ணீர் கொட்டிப் போச்சுங்க...அதான் அழறேன்’ என்று கூறியிருக்கிறார்.
இப்படியாக திம்மக்கா மரம் வளர்க்க ஆரம்பித்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. திம்மக்காவின் பேச்சுப்படி சொல்லப்போனால் அவரது மூத்த பிள்ளைக்கு இப்போது வயது 52 ஆகிறது. விளையாட்டுப்போல வளர்த்த மரங்கள் இன்று கூதூர் மக்களை குளு, குளு என வைத்தபடி திகு, திகுவென வளர்ந்து நாட்டிற்கு பயன்தரும் வகையில் வளர்ந்து நிற்கின்றது.
சுற்றுச்சுழலின் நண்பர் என்ற உயரிய விருதினை அமெரிக்கா அளித்து கவுரவித்தது வரை திம்மக்கா வாங்கியிருக்கும் விருதுகள் பலப்பல.
இன்றைய தேதிக்கு திம்மக்கா வளர்த்துள்ள மரங்களின் மதிப்பு பல கோடி ரூபாயாகும். அத்தனையும் இப்போது அரசாங்கத்தின் சொத்து.பதிலுக்கு அரசாங்கம் திம்மக்காவிற்கு மாதம் 500 ரூபாய் முதியோர் உதவித் தொகையும், வசிப்பதற்கு பெங்களுரூவில் ஒரு வீடும் வழங்கியது.
என் எசமான் (சிக்கண்ணா) இறந்த பிறகு, என் பிள்ளைகள்தான் (மரங்கள்) என் உலகம். இவைளை விட்டு நான் எங்கேயும் வரலை என்று சொல்லிவிட்டு பெங்களுரூ வீட்டை திருப்பிக் கொடுத்து விட்ட திம்மக்கா கூதூரிலேயே 500 ரூபாய் ஒய்வு ஊதியத்தில் தன் ‘பிள்ளைகளுடன் ’வாழ்ந்து வருகிறார். வீட்டில் இருக்கும் நேரத்தைவிட மரங்களுடன் செலவழிக்கும் நேரமே அதிகம்.
எண்பது வயதைத் தாண்டிவிட்ட திம்மக்கா தொடர்ந்து தொலைதூரம் சென்று தண்ணீர் சுமந்துவர முடியாத சூழ்நிலையில், புதிதாக மரமேதும் வளர்க்கவில்லை, ஏற்கனவே வைத்து, வளர்த்த மரங்களை மட்டும் பாதுகாத்து வருகிறார். வளர்ந்த மரங்களும் திம்மக்கா தங்கள் பக்கம்வரும்போது குளிர்ந்த காற்றை வீசியபடியும், ‘அம்மா எங்கள விட்டு எங்கேயும் போயிடாதீங்கம்மா’பேசியபடியும் காணப்படுகின்றன.

ஐயோ பாவம்! ,அப்பாவித் தமிழக மக்கள். | கூடங்குளம் விவகாரங்களைதூண்டி விட்டு, பற்பல இயக்கங்கள் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றன.

கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம், தமிழகத்தில் கொதித்துக் கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசும் இதை வைத்து, அரசியல் செய்து கொண்டிருக்கின்றன. 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய், மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டு, வரும் டிசம்பர் மாதத்தில் இயங்கி, தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையை போக்கவுள்ள, அணு உலைகளின் இறுதிக்கட்ட வேலைகள், அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டன.

உலகில், 529 அணு உலைகள் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் போது, "கூடங்குளத்தில் மட்டும் வெடிக்கும்; மக்கள் அழிவர்; மீன் வளம் பாதித்து, மீனவர்களின் வாழ்வாதாரம் பயங்கரமாக பாதிக்கப்படும்' என பயமுறுத்தி, ஆர்ப்பாட்டம் செய்து, உக்கிர போராட்டங்கள் நடத்துவதன் பின்னணி என்ன?முதல் காரணம்: இந்த அணு உலைகள், ரஷ்ய உதவியால் கட்டப்படுகிறது என்பதே. இதுவே, அமெரிக்க உதவியால் கட்டப்பட்டிருந்தால், எந்த போராட்டமும் நடந்திருக்க்காது என்பது, பட்டவர்த்தனமான உண்மை.இதில், உலக அரசியல், கம்யூனிச எதிர்ப்பு என்பதெல்லாம் இல்லை. இன்று ரஷ்யா, கம்யூனிஸ்டுகளால் ஆளப்படுவதில்லை. இது ஒரு பக்காவான வர்த்தக விவகாரம்.

இந்தியாவிற்கு ரஷ்யா பல உதவிகளைச் செய்துள்ளது. அமெரிக்காவும், நமக்கு சில உதவிகளைச் செய்து வருகிறது. இரு நாட்டு உதவிகளுக்கு இடையேயான பெரிய வேறுபாடு என்னவென்றால், அமெரிக்கா பொருள்களாகத் தான் கொடுக்கும். அவற்றை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளும் தொழில்நுட்பத்தையோ, அனுமதியையோ கொடுக்காது; தேவைப்படும் உதிரி பாகங்களையும், அமெரிக்காவிடமிருந்து தான் வாங்கிக் கொள்ள வேண்டும்.ஆனால், ரஷ்ய உதவிகள் அப்படிப்பட்டதல்ல; பொருள்களை வழங்குவதுடன், அவற்றை இந்தியாவிலேயே தயாரித்துக் கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்களையும், அனுமதியையும் அளிக்கிறது; நாமே உற்பத்தி செய்து கொள்ளவும் உதவுகிறது.
அதனாலேயே அர்ஜுன் டாங்குகள், ஐந்தாவது தலைமுறை போர் விமானங்கள் (எஸ்யூ-50) ஏவுகணைகள் ஆகியவற்றை, நாம் இந்தியாவிலேயே உற்பத்தி செய்து, நம் தேவைக்குப் போக வெளிநாடுகளில் விற்பனை செய்து வருகிறோம். அரசுக்கு அபரிமிதமான வெளிநாட்டுப் பணம், வந்து சேர்கிறது.

மின்சாரத் துறையிலும் அப்படியே. பல துறைகளில் நம் முன்னேற்றத்திற்கும், அத்தியாவசியமான மின்சார உற்பத்திக்கும் உதவ, ரஷ்யா முன்வந்துள்ளது. நாம் தன்னிறைவு அடைந்த பின், நாமாக எவர் உதவியுமில்லாமல், அணு உலைகளை உற்பத்தி செய்து கொள்ளும் வகையில், கூடங்குளத்தில் முன்னோடியாக அணுமின் நிலையங்களை அமைத்து வருகிறது ரஷ்யா.கூடங்குளத்தில் அமைந்துள்ள, இரண்டு வி.வி.இ.ஆர்., 1000 அணு உலைகளுக்குப் பின், ரஷ்ய தொழில்நுட்பத்துடன், அதே வகை அணு உலைகளை நாமே உற்பத்தி செய்து கொள்ளப் போகிறோம். அப்புறம், அமெரிக்காவிலிருந்து அணு உலைகளை ஏன் வாங்க வேண்டும்?

அதனால், 28 லட்சம் கோடி ரூபாய் பெருமானமுள்ள அணு உலைகளை அமெரிக்கா, இந்தியாவிற்கு உடனடியாக விற்க முடியாமல் போய்விடும். அமெரிக்காவுக்கு எவ்வளவு பெரிய இழப்பு!கூடங்குளம் அணு உலைகளைத் தடுத்து நிறுத்திவிட்டால், இந்தியா தன்னிறைவு அடையாது. ரஷ்யா மேலும் உதவுவது தடுக்கப்படும். இந்திய மார்க்கெட்டில், அமெரிக்கா நுழையலாம்; பணம் கொழிக்கலாம். இதுதான் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பின், பின்புலத்திலுள்ள முக்கிய காரணம்.அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் சம்பந்தமான விவாதங்கள், 2006 முதல் 2008 வரை, இந்திய முழுவதும் நடைபெற்று வந்தன. அப்போது, ரஷ்யா உதவியுடன், கூடங்குளம் அணு உலைகளின் கட்டுமான வேலைகள், பெரிய அளவில் நடைபெற்று வந்தன.அப்போதெல்லாம் அணு உலைகள் அமைக்கப்பட்டால், அவை வெடிக்கும்; லட்சக்கணக்கான மக்கள் மாண்டு விடுவர் என, போராட்டங்கள் வெடிக்கவில்லை ஏன்?

அணு உலைகளே வேண்டாம் என்பவர்கள், இப்போது போல் அப்போது கொதித்தெழுந்திருக்க வேண்டியது தானே! ஏன் வாய் மூடி மவுனம் காத்தனர்? காரணம் வெள்ளிடைமலை.அமெரிக்காவுடன் ஏற்பட்ட, 123 அணு உலை ஒப்பந்தம் அமலுக்கு வர, பல சிக்கல்கள் ஏற்பட்டுவிட்டன. இழப்பீடு சம்பந்தமான இந்திய சட்டத்தை, இங்கு உலைகள் கட்டவிருந்த, அமெரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி போன்ற தனியார் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், இந்திய மண்ணில் அமெரிக்கா கால் வைக்க முடியவில்லை.கூடங்குளம் அணு உலைகள், வெற்றிகரமாகச் செயல்படத் துவங்கினால், ரஷ்யாவே இந்தியாவில் கட்டப்படவுள்ள மற்ற உலைகளைக் கட்டத் துவங்கும். பெரிய இந்திய மார்க்கெட்டை, அமெரிக்கா இழக்கும்; அமெரிக்க ஆசை, நிராசையாகப் போய்விடும்.

அந்நிலையைத் தடுக்கவே, இத்தனை ஆண்டுகளுக்குப் பின், கூடங்குளம் அணு உலை உற்பத்தியைத் துவங்கும் சமயத்தில், இந்த திடீர் போராட்டம்; அதுவும் இத்தனை உக்கிரமாக.லோக்கல் காரணம்மற்றுமொரு முக்கியமான தூண்டுதல், மூன்று மாவட்டங்களின் முக்கிய பிரமுகர்களிடமிருந்து. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில், பூமிக்கடியில் அதிகளவு கனிமங்கள் உள்ளன.இவற்றை, சில தனியார் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக எடுத்து பணத்தை அபரிமிதமாக அள்ளிக் கொண்டிருக்கின்றன. கனிம சாம்ராஜ்யம் நடத்துவோர், எதையும் சாதிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.தற்சமயம் கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கத் துவங்கினால், மத்திய அரசு சட்டப்படி, 16 கி.மீ., சுற்றளவுக்கு கனிமங்களை வெட்டி எடுக்கவோ, தொழிற்சாலைகள் அமைக்கவோ, மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் அமைக்கவோ அனுமதியில்லை என்பது, பெரும் தொழிலதிபர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதனால், பல கொழுத்த தொழிலதிபர்களும், கூடங்குளம் போராட்டத்தை ஆதரித்து வருவதோடு, பல உதவிகளையும் செய்து வருகின்றனர்.நிபுணர் குழு ஒன்றை அமைத்து, உலையை ஆய்வு செய்து, மக்களின் அச்சத்தைப் போக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. போராட்டக்காரர்களின் அச்சத்தைப் போக்க முடியுமா?திறந்த மனதுடன் அவர்கள், எதையும் கேட்கத் தயாராயில்லை. அளவுக்கு மீறிய பொய்ப் பிரசாரங்களாலும், துர்போதனைகளாலும், அச்சமும், மனக் கிளர்ச்சியும், அம்மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன.கிளர்ச்சியை முன்னிருந்து நடத்துபவர்கள், சில சமூகக் கட்டுப்பாட்டை தீவிரமாகவும், முழுமையாகவும் பயன்படுத்தி வருகின்றனர். உலகில் இயங்கி வரும், 529 உலைகளிலும், மிகவும் அதிநவீனமான பல பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது, கூடங்குளம் அணு உலைகள் என, எத்தனை விஞ்ஞான ஆதாரங்களுடன் நிரூபித்தாலும், அவர்கள் காது கொடுத்து கேட்கத் தயாரில்லை.தமிழகத்திலேயே, கல்பாக்கத்தில், 25 ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வரும், தலைசிறந்த உதாரணத்தை நினைத்துப் பார்க்கவே அவர்கள் விரும்பவில்லை.கல்பாக்கம் உலையைச் சுற்றி, 40 ஆயிரம் மக்கள், எந்த பாதிப்புமின்றி கடந்த கால் நூற்றாண்டு காலமாக வசித்து வருவதையோ, உலையைச் சுற்றி எப்போதும் போல், மீனவர்கள் மீன் பிடித்து வாழ்ந்து வருவதையோ, ஒரு சாதாரண நிர்தட்சயமான உண்மை என்று, கண்டுகொள்ள மறுக்கின்றனர்.

பற்பல லெட்டர்பேடு இயக்கங்கள், இந்த சாக்கில் மக்களைத் தூண்டி விட்டு, தங்களை முன்னிறுத்தி குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றன.இங்குள்ள அரசியல் கட்சிகள் எல்லாவற்றுக்கும், இவையெல்லாம் நன்றாகத் தெரியும். ஆனால், ஓட்டு ஆதாயங்களுக்காக, கூடங்குளம் விவகாரங்களை அரசியலாக்கிக் கொண்டிருக்கின்றன. பாமரத்தனமான பயத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.உண்மைகள் மறைக்கப்பட்டு, பொய்ப் பிரசாரங்கள் பேயாட்டம் ஆடுகின்றன. இதனால், மின் பற்றாக்குறையால் அல்லலுறும் அப்பாவித் தமிழக மக்கள் தான், ஐயோ பாவம்!