என் பார்வையில் 2011-ல் எப்படி இருந்தது தமிழகம்?

பல அதிரடிகளையும், அரசியல் மாற்றங்களையும், ஏற்ற இறக்கங்களையும் தனக்கே உரிய முறையில் உற்சாகமாக, கோபமாக, சோகமாக நவரசங்களோடும் உள்வாங்கி கொண்டிருக்கிறான் தமிழன்.
சட்டமன்ற தேர்தல், ஆட்சி மாற்றம், உள்ளாட்சி தேர்தல், ஸ்பெக்ட்ரம் வழக்கு, மீனவர் படுகொலை, ஆடுகளம், கொலவெறி பாடல், பார்வதி அம்மாள், ரஜினிகாந்த், சமச்சீர் கல்வி, முன்னாள் அமைச்சர்கள் கைது, பரமகுடி துப்பாக்கி சூடு, கூடங்குளம், பேருந்து கட்டணம், முல்லை பெரியாறு என கலந்து கட்டிய காய்ச்சல்களை 2011 ஆம் ஆண்டில் கண்டிருக்கிறது தமிழகம்.
அமர்க்களமான தொடக்கத்தோடுதான் ஆரம்பித்த 2011-ல் அலைக்கற்றை ஊழல் விவகார சர்ச்சைகள் சென்ற 2010-ல் இருந்தே தொடந்து கொண்டிருந்தாலும், உச்சத்தை அடைந்தது இந்த வருடத்தில்தான்.
ஊழல் விவகாரங்கள் தமிழகத்தை சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில், குறிப்பாக தி.மு.க வின் முன்னணி அரசியல் தலைவரான ஆ.ராசாவை மையமாக வைத்து சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில் தமிழக சட்டமன்ற தேர்தலும் வந்தது. ஏற்கனவே தி.மு.க தலைமையின் குடும்ப அரசியல், மற்றும் அரசியல் ஆதிக்கம் காரணமாகவும், ஈழத்தமிழர் விவகாரத்தில் மேற்கொண்ட இரட்டை நிலைபாடுகள் காரணமாகவும் சரிந்திருந்த தி.மு.க வின் செல்வாக்கு அலைகற்றை விவகாரத்தால் ஆட்டம் கண்டிருந்தது.
சரிவை தூக்கி நிறுத்துவதற்கான தற்காலிக ஜாக்கிகளாக திரைப்பட நடிகை குஷ்பு, வடிவேல் மற்றும் கனிமொழி ஆகியோர் ஊரை சுற்றி சுற்றி வந்தார்கள்.
இன்னொரு பக்கம் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைய தோழர்கள் தவம் கிடந்ததும், ஜெயலலிதாவின் சதுரங்க நகர்ந்தல்களை ஊகிக்க முடியாமல் கறுப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்தோடு சேர்ந்து கலகங்கள் செய்ததும், கடைசியிலும் கடைசியாக இருப்பதை வாங்கிக்கொண்டு கப்சிப் ஆனதும், இரண்டு பக்கமும் நடந்த அலைகழிப்பு விளையாட்டுகளில் வைகோ, திருமா, ராமதாஸ் என ஏட்டிக்கு போட்டி பார்ட்டிகள் எடுபிடிகள் ஆனதும் தனிகதை.
வண்டியில் ஏற முடியாமலோ அல்லது இறக்கி விடப்பட்டோ இந்த ஆட்டத்தில் வைகோ ஓரங்கட்டப்பட்டது தனிகதையிலும் ஒரு கிளைக்கதை. ஆட்சி மாற்றமும் இந்த வருடத்தில் முக்கிய வரலாறாக அமைந்ததுதான்.
தெரிந்தோ தெரியாமலோ, அல்லது தமிழர்களின் ஞாபக மறதியோ, அல்லது தி.மு.க மீதிருந்த வெறுப்போ, அல்லது ஒன்றிரண்டு ஊர்களுக்கு அம்மா சென்று வந்த அரசியல் சுற்றுபயணமோ, அல்லது சிரிப்பு நடிகர் சிங்கமுத்துவின் தீவிர பிரச்சாரமோ, அல்லது பண பட்டுவாடாக்களை அதிரடியாக தடுத்து நிறுத்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடோ, அல்லது அம்மாவே சொன்னது போல அதிமுகவுக்கு இருந்த ஓட்டு வங்கியோ, அல்லது கூட்டணி கட்சிக்காரர்களின் உழைப்போ, அல்லது என பல அல்லது காரணமாக தி.மு.க தோற்கடிக்கப்பட்டு அதிமுக ஆட்சியை பிடித்தது.
முதல் நாள் வரை வரை நம்பகமானதாக இருந்த உளவுத்துறையின் தகவல்கள் இந்த தேர்தலில் திமுகவுக்கு எதிர்கட்சி அந்தஸ்துகூட கிடைக்காமல் போகுமென்ற தகவல்களை சொல்லாததை நினைத்து கருணாநிதியே பல நாட்கள் தூங்கியிருக்க மாட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழக மக்கள் அவருக்கு ஓய்வு கொடுத்திருப்பதாக சொன்னார்.
புதிய தலைமை செயலகத்தில் கால் பதிக்க மாட்டேன் என்கிற சபதம் முடித்து, பழைய கோட்டையில் அரியணை ஏறினார் ஜெயலலிதா.
''எவ்வளவுதான் அடிச்சாலும் தாங்குறான்டா.. இவன் ரொம்ம்ம்ப நல்லவன்டா'' என்று பெயரெடுத்தாலும், ஸ்பெக்ட்ரம் வழக்கை தோண்டித் துருவி தூக்கி நிறுத்தியதில் சுப்ரமணிய சாமியின் பங்கு முக்கியமானது. சி.பி.ஐ.நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மாறி மாறி அலைந்து ஒரு வழியாக கைது படலம் தொடங்கியதில், திமுகவின் கொ.ப.செ ஆ.ராசா கைது செய்யப்பட்டு திகார் கொண்டு செல்லப்பட்டார். அலைக்கற்றை விவகாரத்தில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்று சொன்னது மத்திய தணிக்கை அறிக்கை.
அதை தொடர்ந்து ஆ.ராசாவின் நண்பர் சாதிக் மர்ம சாவு. இந்த ஊழல் விவகாரத்தில் கனிமொழி, தயாளு, கலைஞர் டி.வி சரத்குமார் தொடர்பு என தமிழகத்தை சுற்றிய அலைகற்றை ஊழல் அனுமார் வாலாக நீண்டு கொண்டிருக்க, கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் சம்மன் வந்து சேர்கிறது.
பல ஜாமீன்களும், டெல்லி லாபிகளும் கைவிரிக்க, உடன்பிறப்புக்களின் பிரியா விடையோடு கைதாகிறார் கனி. வழக்குகள், விசாரணைகள், குற்றச்சாட்டுகள், குடும்ப பிரிவுகளுக்கு பிறகு, அதே ஜாமீன், டெல்லி லாபிகளுக்கு பிறகு தமிழகம் மீண்டார். வருங்கால தமிழகம் என அதகளப்படுத்தினார்கள் உடன்பிறப்புகள்.
ஆளுங்கட்சி வெற்றிபெற, எதிர்கட்சிகள் இயலாமையில் கையை பிசைய அல்லது சதியாலோசனைகள் மூலம் உள்ளாட்சி தர்பாரை தட்டிபறிக்க என திரைக்கதையில் ஏகப்பட்ட திருப்பங்ளை கொண்டது உள்ளாட்சி தேர்தல். சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை தக்க வைக்க, அல்லது பெற முடியாத செல்வாக்கை மீட்டெடுக்க களம் கண்டார்கள் கழக கண்மணிகளும், உடன்பிறப்புக்களும்.
இதற்கிடையே தங்களது பலத்தை தனித்தனியே நிரூபிக்க தொடை தட்டிக்கொண்டு கிளம்பின எல்லா சாதிக்கட்சிகளும். அதுவரையில் அப்படியொரு மோதலையும், வாக்கு சீட்டின் நீளத்தையும் கண்டதில்லை தமிழக வாக்காளர்கள். சட்டமன்ற தேர்தலில் களமிறக்க முடியாத காந்தி நோட்டுகளை இந்த கபடிக்கு இறக்கினார்கள் எல்லா சொந்தங்களும்.
அதிரடிகளால் தடாலடி பண்ணும் ஜெயலலிதா இந்த முறை சட்டப்படிதான் நடவடிக்கை இருக்க வேண்டும் என யோசிக்க, பல முன்னாள்களுக்கு பின்னால் இருந்த சகலத்தையும் சல்லடை போட்டு அலச, திடீர் தீபாவளி கொண்டாடியது தமிழக காவல்துறை.
அம்பலத்துக்கு வந்தன பல நில அபகரிப்புகள். சட்டப்படி சந்திப்போம் என்றார்கள் நிலத்தை பறித்தவர்கள். வழக்கு, வாரண்ட், கைது, ஜாமீன் என தினந்தோறும் நடந்த அரங்கேற்றங்களால் பல முன்னாள்களும் பணால் ஆனார்கள். பொன்முடி, கே.என்.நேரு. வீரபாண்டி ஆறுமுகம், என பல பாளையக்காரர்களும் பந்தாடப்பட்டார்கள் கிளை சிறைகளுக்கு.
ஆட்சி மாறியதும் முதல் அடி வாங்கியது பள்ளிக்கூட குழந்தைகள்தான். சென்ற வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி இந்த வருடம் அனைத்து வகுப்புகளுக்கும் கொண்டு வரப்படுவதாக இருந்ததை நிறுத்திவைத்தார் ஜெயலலிதா. பழைய பாடத்திட்டமே செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியானதும் கொந்தளித்தார்கள் பெற்றோர்கள். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என வழக்கு செல்ல இரண்டு மாதங்களுக்கு மேல் பள்ளிக்கூடத்தில் சில்லாட்டம் ஆடினார்கள் குழந்தைகள். ஒரு வழியாக உத்தரவு வந்தாலும், இது பள்ளிக்கல்வியில் ஜெயலலிதா குத்திய கும்மாங்குத்து.
சிக்கன்குனியா, மலேரியா, டெங்கு என எல்லா வகை காய்ச்சல்களுக்கு பிறகு தமிழகத்தில் அதிகம் பேருக்கு பிடித்த காய்ச்சல் ரஜினி காய்ச்சல்தான். 'ராணா' பட தொடக்கத்தில் தலைவருக்கே ஏற்பட்டது காய்ச்சல். தமிழகம் முழுவதும் மருந்து தின்றார்கள் ரசிகர்கள்.
பால்சோறு, மண்சோறு, அன்னதானம், அலகு காவடி என ரசிகர்கள் கவலை கண்ணீர்விட சிகிச்சைக்கு சிங்கப்பூர் சென்றார் ரஜினி. சிகிச்சைக்கு பின் நலத்தோடு திரும்பி ரசிகர்களுக்கு காட்சி தருவார் என்றால் அவ்வபோது மீடியா பிளாஷ்களில் மட்டும் முகம் காட்டியது ஏன் என்பது ரஜினிக்கு தான் வெளிச்சம். அலகு காவடி ரசிகர்களுக்கு ஏமாற்றமோ ஏமாற்றம்.
வழக்கமாக மதுரை பற்றி படமெடுப்பவர்கள் மீனாட்சி கோவிலுக்கு பிறது திரையில் அதிகம் காட்டுவது அருவாளைத்தான். ஆடுகளம் கதை களத்தை காட்டியது. நீண்ட நாட்களுக்கு பிறகு பல தேசிய விருதுகள் அள்ளிவந்த படம் என தமிழ் திரையுலகு நம்பிக்கை கொண்டாடியது.
நடிகர் தனுஷ் நடிப்பில் பின்னி பெடலெடுத்த படங்களில் இதுவும் ஒன்று. ஆடுகளத்துக்கு பிறகு தனுஷ் அதகளபடுத்திய மற்றொரு ஆட்டம் 'கொலவெறி' பாட்டு. உலகம் முழுவதும் கேட்டு ரசித்த இந்த பாட்டுக்கு அமிதாப் வரை லைக் கொடுக்க இந்த ஆண்டின் கடைசி நாட்கள் வரை சுற்றுப்பயண கால்ஷீட்தான் பாடலாசிரியருக்கு.
பேருந்து கட்டணம், கூடங்குளம், முல்லை பெரியாறு, பரமகுடி சம்பவம் என இந்த வருடத்தின் வயிற்றுப்பாட்டு பிரச்னைகள் ஏராளம் என்றுதான் சொல்ல வேண்டும். மூன்றாவது கட்ட உண்ணாவிரத போராட்டம் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கூடங்குளம் அணுஉலை தொடங்கியே தீருவோம் என ரஷ்யாவுக்கு போன இடத்தில் கதைத்து வந்தார் பிரதமர்.
அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என குற்றஞ்சாட்டுகிறவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மக்கள் ஊர் முறை வைத்து உண்ணாவிரதம் இருப்பதற்கும், கோரிக்கைகள வைப்பதற்கும் மத்திய அரசு செவி சாய்ப்பதாக தெரியவில்லை.
கேரள அரசியல்வாதிகளின் பொய் ஆரவாரங்களில் இரண்டு மாநில உறவுகளை பாதித்த விவகாரம் முல்லை பெரியாறு அணை பிரச்னை. தமிழக நீராதாரமான பெரியாறு அணையை உடைப்பதற்கு கேரளா திட்டமிட, கொதித்துவிட்டது மொத்த தமிழகமும்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரையும் தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டதும், அதுவரையில் அமைதியாக இருந்த மொத்த தமிழகமும் பற்றியெறிந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த உணர்ச்சிகரமான நாட்களில் காஞ்சியில் செங்கொடி என்கிற தோழி தன்னை நெருப்புக்கு மாய்த்துக்கொண்டதுதான் சோகத்திலும் சோகம். பல போராட்டங்கள், சட்டமன்ற தீர்மானம், உயர்நீதிமன்ற தீர்ப்பு என பல நடவடிக்கைகளுக்கு பிறகு தற்போது தூக்குக்தண்டனை நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.
இந்த வருடத்தின் இன்னும் ஒரு சோகம் பரமகுடி துப்பாக்கிசூடு. தங்கள் தலைவர் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களிடம் போலீசார் கடுமையாக நடந்துகொள்ள, மூண்டது கலவரம். போலீசின் துப்பாக்கி சூடு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியது. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் காயம் ஆறாமல் விசாரனைக்கு ஒத்துழைக்கவில்லை இன்னமும்.
எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக தடுமாறிய தமிழனுக்கு ஒட்டுமொத்த அடியாக விழுந்தது பேருந்துகட்டணம், மற்றும் பால் விலை உயர்வுதான். இந்த ஒவ்வாமையில் கொஞ்சநாள் ஆட்சியை காய்ச்சிய தமிழன் பின்னர் சகஜமானது வழக்கமான தமிழர்களின் குணாதியசம் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆகக் கடைசியாக ஆண்டு முடிவதற்கு சில நாட்களே இருக்கையில் இரண்டு புயல்களை சந்திக்க நேர்த்தை குறிப்பிடாமல் இந்த தொகுப்பை முடிக்க முடியாது.
ஒன்று, உடன் பிறாவா சகோதரி சசிகலாவை வீட்டுக்கு அனுப்பிய ஜெயலலிதாவின் நடவடிக்கை. சசி அண்ட் கோ மற்றும் அவருடன் கூடிய தொண்டரடிப்பொடி வகையறாக்களையும் கட்சியின் அடிமட்ட உறுப்பினர் பதவி வரை பிடிங்கி என ஜெ. எடுத்த அவதாரம் ஒரு அவரது சொந்த வாழ்க்கையில் எடுத்த மிகப்பெரிய முடிவு என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் புயலின் சேதாரங்கள் 2012-ல் ஆய்வுக்குப் பின் தெரிய வரலாம்.
இரண்டாவதாக, கடைசி இரு நாட்களில் தமிழகம் கண்ட சோகம் தானே புயல். கடலூரும், பாண்டிச்சேரியும் சிக்கி சின்னா பின்னமானதில் 33 பேர் இறந்தனர். பல நூறு கோடி மதிப்புக்கு பாதிப்பும் இருக்கிறது.
இந்தப் புயல் குறித்து முன்பே எச்சரிக்கை செய்யப்பட்டதால் பெருமளவு பாதிப்பு தவிர்க்கப்பட்டது என்றாலும், பேரிடர் நிவாரண குழு வேலையை வேகமாக முடுக்கியிருந்தால் இந்த அளவு பாதிப்பைகூட குறைத்திருக்க முடியும்.
'கடலூரையும், புதுச்சேரியையும் துவம்சம் செய்த புயல், ஒருவேளை சென்னையைத் தாக்கியிருந்தால்?'
இந்த எதிர்மறை சிந்தனை கொண்ட கோணத்தில் அரசு சிந்தித்து, பேரிடர்களைத் தாங்கக் கூடிய 'கட்டமைப்பு' வசதிகளை சரிசெய்ய வேண்டும்.
தானே... தமிழகத்துக்கு இயற்கை வழங்கிய இறுதி எச்சரிக்கையாக இருக்கட்டும்.