Total Pageviews

Monday, 20 August 2012

சீனக் கடலில் தீவுச் சண்டை | இந்தியாவுக்கு சீனா நேரடியாக எச்சரிக்கை

கிழக்கு, தென்சீனக் கடல் பகுதியில் உள்ள தீவுகளுக்குப் பல்வேறு நாடுகள் உரிமை கொண்டாடி வருவதால் சமீபகாலமாக அக்கடல் பகுதியில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது.கிழக்கு சீனக் கடல் பகுதியில் ஜப்பானுடன் சீனாவுக்கும், தென் கொரியாவுக்கும் ஏற்பட்டுள்ள தீவுச் சண்டைதான் பதற்றத்துக்குக் காரணம். தூதர்களைத் திரும்ப அழைப்பது, அதிபர்களின் வார்த்தைப் போர், போர்க் கப்பல்களை முன்னெடுத்துச் செல்வது, ராணுவத்தைத் தயார்படுத்துவது என்று கிழக்கு சீனக் கடல் பகுதியில் நாளுக்குநாள் பிரச்னை பெரிதாகிக் கொண்டிருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

கிழக்கு சீனக் கடல்பகுதி, சிறு சிறு தீவுகள் நிறைந்த இடம். அங்குள்ள தீவுகளுக்கு வெவ்வேறு பெயர்களை வைத்துக் கொண்டு ஜப்பான், சீனா, தென் கொரியா ஆகிய நாடுகள் தங்களுக்கென்று உரிமை கொண்டாடி வருவது பல ஆண்டுக்காலமாகத் தொடர்ந்து வருகிறது.இத்தீவுகளில் உள்ள தாது வளம், கடல் பகுதியில் காணப்படும் அபரிமிதமான மீன் வளம் உள்ளிட்டவையும், கிழக்கு சீனக் கடல்பகுதியில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கமுமே இந்தப் போட்டிகளுக்குக் காரணம்.அதே நேரத்தில் தென் சீனக் கடல்பகுதியிலும் இதேபோன்ற பிரச்னைகள் உள்ளன. சர்வதேசக் கப்பல் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பகுதி இக்கடல் பகுதி வழியாகத்தான் நடைபெற்று வருகிறது என்பதும், இக்கடல் பகுதியில் புதைத்து கிடக்கும் அபரிமிதமான எண்ணெய் வளமுமே இப்பகுதியில் ஆதிக்கப் போட்டிக்கு முக்கியக் காரணம்.

சீனா, தைவான், பிலிப்பின்ஸ், வியத்நாம் போன்ற நாடுகளும் இப்பகுதியில் தீவுச் சண்டையில் ஈடுபட்டுள்ளன.கிழக்கு சீனக் கடல் பகுதியில் தியாவு தீவுக் கூட்டம் யாருக்குச் சொந்தம் என்ற போட்டியால் சமீபகாலமாக ஜப்பான் - சீனா இடையிலான உறவு சீர்குலைந்து மோதல்போக்கு அதிகரித்துள்ளது. சீனாவுக்கான ஜப்பான் தூதர் யுச்சிரோ, தீவுகள் பிரச்னையில் தங்கள் நாட்டு அரசின் கொள்கைக்கு எதிராக சில கருத்துகளைத் தெரிவித்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சீனாவுக்கான தனது தூதரை ஜப்பான் திரும்ப அழைத்துக் கொண்டது.தீவுக் கூட்டத்தின் மீதான தங்கள் உரிமையை நிலைநாட்ட அப்பகுதியில் உள்ள 3 முக்கியத் தீவுகளை விலை கொடுத்து வாங்கி, ராணுவத்தை நிறுத்த முடிவு செய்தது ஜப்பான்.

இதையடுத்து உடனடியாக தனது சண்டித்தனத்தைக் காட்டியது சீனா. தனது இரு போர்க்கப்பலை பிரச்னைக்குரிய பகுதியில் நிறுத்தி வைத்து பதற்றத்தை மேலும் அதிகரித்தது. இதற்கு பதிலடியாக, "அப்பகுதியில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று ஜப்பான் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.தென் சீனக் கடலில் சீனாவுக்குப் போட்டியாக இருக்கும் நாடுகளான பிலிப்பின்ஸ், வியத்நாம், தைவான் போன்றவை சற்று பலவீனமானவை என்பதால் அங்கு தங்கள் ஆதிக்கத்தை எளிதில் நிலைநாட்டி விடலாம் என்ற நோக்கில் சீனா செயலில் இறங்கியுள்ளது. தென் சீனக் கடல் பகுதியின் பெரும்பகுதி தங்களுக்கே உரியவை என்று வரைபடத்தை வெளியிட்டுள்ளது.இந்த விவகாரத்தால் இந்தியாவுக்கு இப்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்திய பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி, வியத்நாம் அருகே தென் சீனக் கடல் பகுதியில் அந்நாட்டு ஒத்துழைப்புடன் எண்ணெய் துரப்பணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தப் பணிகளை உடனடியாக நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமென இந்தியாவுக்கு சீனா நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், சீனாவின் எச்சரிக்கையைப் புறக்கணித்துவிட்டு தொடர்ந்து பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அப்பகுதியில் மேலும் பல துரப்பணப் பணிகளை மேற்கொள்ள வியத்நாமுடன் இந்தியா ஒப்பந்தமும் செய்து கொண்டுள்ளது. தொடக்கத்தில் இருந்தே இந்தியாவை வேண்டாத நாடாகக் கருதும் சீனாவால், தாங்கள் ஆதிக்கம் செலுத்த விரும்பும் தென் சீனக் கடல் பகுதியில் இந்தியா நிலைகொண்டுள்ளதை முற்றிலுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிரச்னை உச்சத்தை எட்டி சர்வதேச தலையீடுகள் ஏற்படும்போது வியத்நாமுக்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தான் இந்தியா எடுக்கும் என்பதுவே இதற்குக் காரணம்.அதே நேரத்தில் கிழக்கு சீனக் கடல் பகுதியில் நிலைமை முற்றிலும் வேறு.

விடாக்கொண்டனாக ஜப்பானும், கொடாக்கண்டனாக சீனாவும் மோதலில் இறங்கியுள்ளன. இதனால் கிழக்கு சீனக் கடல் பகுதியில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தென் கொரியாவும் சில தீவுகளுக்கு உரிமை கொண்டாடி போட்டியில் இறங்கியுள்ளது.ஜப்பானால் தகிஷிமா என்றும், தென் கொரியாவால் டோக்டோ என்றும் உரிமை கொண்டாடப்படும் பிரச்னைக்குரிய தீவுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொண்டார் தென் கொரிய அதிபர் லீ மயூங்-பாக். இதனால் கடும் அதிருப்தியடைந்த ஜப்பான், தென்கொரியாவுக்கான தனது தூதரை உடனடியாகத் திரும்ப அழைத்துக் கொண்டது.ஒலிம்பிக் போட்டியிலும் இந்தப் பிரச்னை எதிரொலித்தது. ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் ஜப்பானை தென் கொரியா வீழ்த்தியது. அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக, இத்தீவு பிரச்னையில் ஜப்பானைக் கண்டிக்கும் வாசக அட்டையுடன் மைதானத்துக்குள் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார் தென்கொரிய வீரர் பார்க் ஜோங்வூ.அடுத்த சில நாள்களிலேயே தென்கொரியாவைச் சேர்ந்த 40 பேர் அடங்கிய குழு பிரச்னைக்குரிய தீவுக்கு தங்கள் நாட்டு தேசியக் கொடியுடன் நீந்திச் சென்று தீவு தங்களுக்குத்தான் என்று உரிமை கொண்டாடியது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக யோசித்து வருகிறது ஜப்பான். இந்தப் பிரச்னை குறித்து பேசித் தீர்வுகாண வாய்ப்பே இல்லை என்று ஜப்பான், சீனா, தென்கொரியா ஆகியவை பகிரங்கமாகவே அறிவித்துவிட்டன. எனவே நிலைமை மேலும் மோசமானால் சீனக் கடல் பகுதியில் போர் வெடிக்கும் அபாயம் உள்ளது.

Friday, 4 May 2012

காந்தியிடமும் கைத்தடி இருப்பதில் தப்பு இல்லையே!


தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இங்கே யாருக்குத் தலை வெடித்ததோ இல்லையோ, 2012 ஏப்ரல் 13 அன்று வட கொரியா செலுத்திய நூறடி நீள ஏவுகணை கிளம்பி, ஒன்றரை நிமிடத்தில் வெடித்துச் சுக்கு நூறு ஆகியது.முன்னாள் அதிபர் இரண்டாம் கிம் சங் நூற்றாண்டு நினைவாக "யூன்ஹா-3' வானிலை ஆய்வூர்தியைச் செலுத்தியது. சீன எல்லையில் சோஹே தளத்தில் இருந்து சீறிப் பாய்ந்தது. அணு ஆயுதம் சுமந்து அலாஸ்கா அல்லது ஹவாய் வரை செல்லும் திறன் கொண்டதாம்.சீனாவோ சமீபத்தில் 800 கிலோமீட்டர் உயரத்தில் புவிசுற்றி வந்த தனது பழைய செயற்கைக்கோள் ஒன்றைப் பூமியில் இருந்தபடியே டி.எஃப்-21 ரக நடுத்தர வீச்சுக்கணையால் குறிவைத்து வீழ்த்தி இருக்கிறது.ஏறத்தாழ முக்கால் டன் எடை கொண்ட அந்தச் செயற்கைக்கோள், 20 லட்சம் துக்கடாக்கள் ஆகி விண்வெளியில் சிதறிற்று. கேட்டால் அமெரிக்கப் பெரிய அண்ணன் மட்டும் 1985-ஆம் ஆண்டு இப்படிச் செய்யவில்லையா என்று வழக்கமான அரசியல் விவாதம்வேறு.இயல்பாகவே ஏவூர்திகளின் எரிந்து முடிந்த பொறிகலன்கள் விண்ணில் கழற்றிவிடப்படும். நம் நாட்டில் காலாவதியான "விசா' வைத்துக்கொண்டு அயல்நாட்டினர் சுதந்திரமாகத் திரிவதைப்போல, விண்கலன் உதிரி பாகங்கள், வெளிப்பூச்சுகள், வெப்பக் கவச ஓடுகள், திருகாணிகள், எரிபொருள் குழாய்கள், ரப்பர் வளையங்கள் என எத்தனையோ சில்லறைப் பொருள்கள், விண்வெளியில் குப்பைகளாகத் தன்போக்கில் அலைந்து கொண்டுதான் இருக்கின்றன.விண்வெளி வீரர்கள் கைங்கரியமும் இதில் அடக்கம். அமெரிக்க முதல் விண்வெளி வீரர் எட்வர்ட் ஒயிட் அண்டவெளியில் இறங்கியபோது அவரது கையுறை விண்ணில் கழன்று தொலைந்து போயிற்றாம். ஜெமினி-10 விண்கலப் பயணி மைகேல் காலின்ஸ் கொண்டு சென்ற காமிரா கை தவறி புவிசுற்றுப்பாதையில் விழுந்துவிட்டதாம்.பதினைந்து ஆண்டுகளாக ரஷியாவின் மிர் விண்சுற்று நிலையத்துக்குப் பலர் சென்று குடியேறினர். அவர்கள் இன்றைய அடுக்குமாடிக் குடியிருப்போர் சுபாவம் கொண்டவர்களோ என்னவோ? பால்கனியில் நின்றபடி எச்சில் தட்டுகள், குளிர்பான டப்பாக்கள், பாட்டில்கள் எல்லாம் கீழ்வீட்டுக் கொல்லையில் வீசி அழகுபடுத்துவதைப்போல, மிர் நிலைய வீரர்களும் திருப்பணி செய்தார்களாமே.தங்கள் கைக்கருவிப் பைகளையும், பல் தேய்க்கும் புருசுகளையும் விண்ணில் எறிந்து வந்ததாக இப்போது தெரிவிக்கிறார்கள். இந்திய வம்சாவளி மங்கை சுனிதா வில்லியம்ஸ் கூட தனது பங்குக்குக் காமிராவை விண்ணில் நழுவ விட்டுவிட்டாராம்.1981-ஆம் ஆண்டு ஷேஃப்டர் கணிப்புப்படி 5000 துண்டுத் துக்கடாக்கள் விண்ணில் சுற்றித் திரிகின்றன என்று அறிவிப்பானது. 1990-ஆம் ஆண்டுகளில் செலுத்தப்பெற்ற 28,000 விண்கலன்களில் 8,500 உதிரிகள் விண்வெளியிலேயே தங்கி விட்டனவாம்.இதுபோல 22,000 விண்வெளி ஓட்டை உடைசல்கள் பூமிக்கு வெளியே சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன என்ற அதிர்ச்சித் தகவல். அமெரிக்காவின் வான்கார்டு என்ற செயற்கைக்கோள் செயல் இழந்தும் கடந்த 50 ஆண்டுகளாக விண்ணில் "சவக் கிடங்குப் பாதை'யில் சுற்றி வருகிறது.அதன் ஆவி இன்னும் 240 ஆண்டுகள்கூட அங்கேயே அலையுமாம்.

ஐரோப்பாவின் "என்விசாட்' என்ற சுற்றுச்சூழல் செயற்கைக்கோள் இன்று சுற்றுச்சூழலுக்கே மாசு ஆகிவிட்டது. இந்தத் தமிழ்ப் புத்தாண்டிற்குத் தலைநாள் தான் அது விண்ணில் செயல் இழந்து திரிகிற அழுக்கு அறிக்கை வெளிவந்தது.அப்படியானால் செயற்கைக்கோள் சுற்றுப்பாதைகளில் விபத்துகள் நிகழாதா? தமிழ்நாட்டில் அன்றாடம் நடக்கும் சராசரி 50 சாலை விபத்துகளில் 15 பேராவது பரம பதம் அடைகின்றனராம். ஆனால், விண்வெளியில் ஏறத்தாழ 80 லட்சத்துக்கு ஒன்று என்பதுதான் விபத்து வாய்ப்பு. இருந்தாலும், 2009-ஆம் ஆண்டு ஒரே ஒருமுறை விண்வெளியில் அமெரிக்காவும் ரஷியாவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.இரிடியம்-33 என்ற செயற்கைக்கோளும், காஸ்மாஸ்-2251 விண்கலமும் மோதியது. மண்வெளியிலோ தினம் மண்டை உடைப்புகள்தாம். அண்டை நாடுகளின் அறிக்கைப் போர்கள், உள்நாட்டின் அக்கப்போர்கள். போகட்டும், இன்னொரு செய்தி. ரஷியாவின் "காஸ்மாஸ்-954', விண்வெளியில் செயல் இழந்தபோது, அதன் அணுக்கருத் தண்டுகள் விடுவிக்கப்பட்டு, பூமிக்கு அப்பால் அதி உயரப் பாதைகளில் தள்ளிவிடப்பட்டன. 3.8 டன் வெற்றுக் கூடு மட்டும் 1978 ஜனவரி 24 அன்று கொஞ்சம் கதிரியக்கப் பொருள்களுடன் வட மேற்கு கனடாவில் வந்து விழுந்தது. அமெரிக்க அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை வேவு பார்க்க "ரோர்சாட்' என்ற ரகசியக் கடற்படைத் திட்டத்தின்கீழ் செலுத்தப்பட்ட ஏவுகலன் அது. இவ்வகையில் அணுக்கரு உந்தும அமைப்பு கொண்ட "காஸ்மாஸ்-1402' விண்கலமும் பூமிக்குள் விழுந்ததே. இந்த சர்வதேசக் கூத்து எல்லாம் யாரிடம் முறையிடுவது?இந்த விண்வெளிக் குப்பைகள் 700 கோடி மக்கள் வாழும் பூமியின் பரப்பளவை ஒப்பிடும்போது ஒருவர் தலையில் வந்து விழுவதற்கான வாய்ப்பு 3200-இல் ஒன்றுதானாம்.இருந்தாலும், 1997-ஆம் ஆண்டு ஓக்ளா நாட்டு துல்சா நகரில் லோத்தி வில்லியம்ஸ் என்னும் பெண்மணியின் தோளில் ஒரு சோடா பாட்டில் அளவு சிறு பொருள் மோதியது.

 உண்மையில் 1996-ஆம் ஆண்டு செலுத்தப்பெற்ற டெல்டா - 2 ஏவூர்தியின் உடைந்த உதிரிபாகம். இதற்காகப் பாதுகாப்புத்துறை, செல்வி வில்லியம்ஸிடம் எழுத்துப்பூர்வ மன்னிப்புக் கோரியது உபகதை.அவ்வாறே, ஒரு பள்ளிப் பேருந்தின் எடை (6 டன்) கொண்ட "யு.ஏ.ஆர்.எஸ்' என்ற அமெரிக்க "உயர் வளிமண்டல ஆய்வுச் செயற்கைக்கோள்' 2005-ஆம் ஆண்டிலேயே செயல் இழந்தது. காதும் காதும் வைத்தமாதிரி, 2011 செப்டம்பர் 24 அன்று காலை மேற்கு கனடாவில் கல்கரி என்னும் இடத்திற்கு அருகில், நல்ல வேளை தலையில் விழாமல் தரையில் விழுந்தது.அதன் உடைந்த 26 டைட்டானிய உலோகத் துண்டங்கள் மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்து வந்தது பலருக்கும் தெரியாது. இந்த உடைசலின் மிகப்பெரிய துண்டு ஏறத்தாழ 140 கிலோ. இரண்டு ஆள் கனம் என்றால் பாருங்களேன்.அதற்கு அடுத்த மாதமே, விண்வெளியின் எக்ஸ்-கதிர் மூலங்களை ஆராய்ந்து வந்த "ரோசாட்' என்ற ராண்ட்ஜன் செயற்கைக்கோளும் 2011 அக்டோபர் 23 அன்று பூமியில் விழுந்தது. அதுவும் நம் வங்காள விரிகுடாக் கடலில்தான். நமக்குத்தான் அமைச்சர்களின் நீதிமன்ற வழக்குகளில் கவனம் செலுத்தவே நேரம் போதாதே.ஆனால், ரோசாட் விஷயத்தில் புலன் விசாரணை நடக்கிறது. அது இயல்பான மரணம் இல்லையாம்.அமெரிக்காவின் கொட்டார்டு விண்வெளி மையத்தில் எக்ஸ்-கதிர் விண்இயற்பியல் பிரிவின் கணிப்பொறி மென்பொருளுக்குள் ரஷியா திணித்த தீவிரவாதத் தகவல் தாக்குதல் என்கிற கோணத்திலும் ஆய்வு நடக்கிறது.

இதற்கு மத்தியில், அமெரிக்கா "ஸ்பேஸ் எக்ஸ்' போன்ற தனியார் நிறுவனங்களிடம் இருந்து டிராகன், ஃபால்கன் என்று எல்லாம் உள்நாட்டு நேரடித் தயாரிப்புகளை வாங்கி வருகின்றன. நாமோ பீரங்கி ஆகட்டும், போர் வாகனம் ஆகட்டும், இடைத் தரகர்களிடம் உறவாடி, உடன்படிக்கை செய்து சுவிஸ் வங்கியில் சேமித்து வைப்பதே பரம்பரைப் புத்தி.போர்க்குற்றம் சுமத்தப்பட்ட அண்டை நாடு, நம் வீட்டு அடுப்படிப் புகை காற்றில் கலந்தால் தனக்கு மூச்சு முட்டும் என்று சிணுங்குகிறது.எப்படியோ, 2012 "பன்னாட்டுக் கூட்டுறவு ஆண்டு' என்று அறிவிப்பாகி உள்ளதுதான் மிச்சம். உலக ஒற்றுமையை வலியுறுத்தும் ஆண்டாம். ஆனால், சர்வ நாடுகளின் மண்டைக்குள்ளும் கத்திரி வெயில்.
உலக அளவில் இன்று முதல் பத்து ஆயுதத் தொழில் நுட்பங்களை வரிசைப்படுத்துவோம்.
 1. தகவல் தொடர்புகளைக் கண்ணுக்குத் தெரியாமல் அழிக்கும் தானியங்கி இயந்திரங்கள்,
 2. கண்புரை அகற்ற உதவும் நுட்பத்தின் மறுவடிவம் - இன்று தொலைவானில் ஏவுகணைகளைச் சிதறடிக்கும் லேசர்,
 3. விண்வெளியில் மிதந்தபடி எதிரி விமானங்களை நிலைகுலையச் செய்யும் டங்க்ஸ்டன் ஈட்டிகள்.
 4. காற்றைவிட 5 மடங்கு அதிவேகம் கொண்ட ஹைப்பர் சானிக் விமானங்கள்.
 5. கனன்ற சிகரெட் மாதிரி எதிரிகள் மேல் தோலில் சூடு வைக்க மில்லி மீட்டர் அலைநீளக் கதிர்வீச்சுக் கற்றை.
 6. அணு ஆயுதங்கள்,
7. மேனி நோகாமல் உள் புண்ணாக்கும் மின்பொறித் துப்பாக்கிகள்,
8. கணிப்பொறியின் மூளைக்குள் அதிரடி மின்துடிப்பு ஊட்டி வெடிக்கச் செய்யும் "மின்னணு குண்டுகள்',
9. ஒவ்வொரு கட்டமாக எதிரியை மோப்பம் பிடித்துத் தாக்கும் அதி நவீன ஏவுகணைகள்,
10. தகவல் தொடர்புக் குறுக்கீட்டுத் தளவாடங்கள்.

இத்தனைக்கும் நடுவில், இந்தியாவின் பஞ்சாக்னி, அதுதான் "அக்னி-5' வெற்றி. நீர் மூழ்கி அணு ஆயுதக் கப்பல் வெள்ளோட்டம் வேறு. அது சரி, இந்தியா அகிம்சை நாடு ஆயிற்றே, நமக்கேன் ஆயுதம் என்றுதானே கேட்கிறீர்கள்?
பன்னாட்டுக் கூட்டுறவு ஆண்டின் கோலாகலம்! காந்தியிடமும் கைத்தடி இருப்பதில் தப்பு இல்லையே.

ஜெனகராஜ் பழனிசாமி

Friday, 6 January 2012

தமிழகம்.2011-ல் எப்படி இருந்தது... என் பார்வையில்

என் பார்வையில் 2011-ல் எப்படி இருந்தது தமிழகம்?






















பல அதிரடிகளையும், அரசியல் மாற்றங்களையும், ஏற்ற இறக்கங்களையும் தனக்கே உரிய முறையில் உற்சாகமாக, கோபமாக, சோகமாக நவரசங்களோடும் உள்வாங்கி கொண்டிருக்கிறான் தமிழன்.

சட்டமன்ற தேர்தல், ஆட்சி மாற்றம், உள்ளாட்சி தேர்தல், ஸ்பெக்ட்ரம் வழக்கு, மீனவர் படுகொலை, ஆடுகளம், கொலவெறி பாடல், பார்வதி அம்மாள், ரஜினிகாந்த், சமச்சீர் கல்வி, முன்னாள் அமைச்சர்கள் கைது, பரமகுடி துப்பாக்கி சூடு, கூடங்குளம், பேருந்து கட்டணம், முல்லை பெரியாறு என கலந்து கட்டிய காய்ச்சல்களை 2011 ஆம் ஆண்டில் கண்டிருக்கிறது தமிழகம். 


அமர்க்களமான தொடக்கத்தோடுதான் ஆரம்பித்த 2011-ல் அலைக்கற்றை ஊழல் விவகார சர்ச்சைகள் சென்ற 2010-ல் இருந்தே தொடந்து கொண்டிருந்தாலும், உச்சத்தை அடைந்தது இந்த வருடத்தில்தான்.

ஊழல் விவகாரங்கள் தமிழகத்தை சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில், குறிப்பாக தி.மு.க வின் முன்னணி அரசியல் தலைவரான ஆ.ராசாவை மையமாக வைத்து சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில் தமிழக சட்டமன்ற தேர்தலும் வந்தது. ஏற்கனவே தி.மு.க தலைமையின் குடும்ப அரசியல், மற்றும் அரசியல் ஆதிக்கம் காரணமாகவும், ஈழத்தமிழர் விவகாரத்தில் மேற்கொண்ட இரட்டை நிலைபாடுகள் காரணமாகவும் சரிந்திருந்த தி.மு.க வின் செல்வாக்கு அலைகற்றை விவகாரத்தால் ஆட்டம் கண்டிருந்தது.

சரிவை தூக்கி நிறுத்துவதற்கான தற்காலிக ஜாக்கிகளாக திரைப்பட நடிகை குஷ்பு, வடிவேல் மற்றும் கனிமொழி ஆகியோர் ஊரை சுற்றி சுற்றி வந்தார்கள்.

இன்னொரு பக்கம் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைய தோழர்கள் தவம் கிடந்ததும், ஜெயலலிதாவின் சதுரங்க நகர்ந்தல்களை ஊகிக்க முடியாமல் கறுப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்தோடு சேர்ந்து கலகங்கள் செய்ததும், கடைசியிலும் கடைசியாக இருப்பதை வாங்கிக்கொண்டு கப்சிப் ஆனதும், இரண்டு பக்கமும் நடந்த அலைகழிப்பு விளையாட்டுகளில் வைகோ, திருமா, ராமதாஸ் என ஏட்டிக்கு போட்டி பார்ட்டிகள் எடுபிடிகள் ஆனதும் தனிகதை.

வண்டியில் ஏற முடியாமலோ அல்லது இறக்கி விடப்பட்டோ இந்த ஆட்டத்தில் வைகோ ஓரங்கட்டப்பட்டது தனிகதையிலும் ஒரு கிளைக்கதை. ஆட்சி மாற்றமும் இந்த வருடத்தில் முக்கிய வரலாறாக அமைந்ததுதான்.

தெரிந்தோ தெரியாமலோ, அல்லது தமிழர்களின் ஞாபக மறதியோ, அல்லது தி.மு.க மீதிருந்த வெறுப்போ, அல்லது ஒன்றிரண்டு ஊர்களுக்கு அம்மா சென்று வந்த அரசியல் சுற்றுபயணமோ, அல்லது சிரிப்பு நடிகர் சிங்கமுத்துவின் தீவிர பிரச்சாரமோ, அல்லது பண பட்டுவாடாக்களை அதிரடியாக தடுத்து நிறுத்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடோ, அல்லது அம்மாவே சொன்னது போல அதிமுகவுக்கு இருந்த ஓட்டு வங்கியோ, அல்லது கூட்டணி கட்சிக்காரர்களின் உழைப்போ, அல்லது என பல அல்லது காரணமாக தி.மு.க தோற்கடிக்கப்பட்டு அதிமுக ஆட்சியை பிடித்தது.

முதல் நாள் வரை வரை நம்பகமானதாக இருந்த உளவுத்துறையின் தகவல்கள் இந்த தேர்தலில் திமுகவுக்கு எதிர்கட்சி அந்தஸ்துகூட கிடைக்காமல் போகுமென்ற தகவல்களை சொல்லாததை நினைத்து கருணாநிதியே பல நாட்கள் தூங்கியிருக்க மாட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழக மக்கள் அவருக்கு ஓய்வு கொடுத்திருப்பதாக சொன்னார்.

புதிய தலைமை செயலகத்தில் கால் பதிக்க மாட்டேன் என்கிற சபதம் முடித்து, பழைய கோட்டையில் அரியணை ஏறினார் ஜெயலலிதா

''எவ்வளவுதான் அடிச்சாலும் தாங்குறான்டா.. இவன் ரொம்ம்ம்ப நல்லவன்டா'' என்று பெயரெடுத்தாலும், ஸ்பெக்ட்ரம் வழக்கை தோண்டித் துருவி தூக்கி நிறுத்தியதில் சுப்ரமணிய சாமியின் பங்கு முக்கியமானது. சி.பி.ஐ.நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மாறி மாறி அலைந்து ஒரு வழியாக கைது படலம் தொடங்கியதில், திமுகவின் கொ.ப.செ ஆ.ராசா கைது செய்யப்பட்டு திகார் கொண்டு செல்லப்பட்டார். அலைக்கற்றை விவகாரத்தில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்று சொன்னது மத்திய தணிக்கை அறிக்கை.

அதை தொடர்ந்து ஆ.ராசாவின் நண்பர் சாதிக் மர்ம சாவு. இந்த ஊழல் விவகாரத்தில் கனிமொழி, தயாளு, கலைஞர் டி.வி சரத்குமார் தொடர்பு என தமிழகத்தை சுற்றிய அலைகற்றை ஊழல் அனுமார் வாலாக நீண்டு கொண்டிருக்க, கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் சம்மன் வந்து சேர்கிறது.

பல ஜாமீன்களும், டெல்லி லாபிகளும் கைவிரிக்க, உடன்பிறப்புக்களின் பிரியா விடையோடு கைதாகிறார் கனி. வழக்குகள், விசாரணைகள், குற்றச்சாட்டுகள், குடும்ப பிரிவுகளுக்கு பிறகு, அதே ஜாமீன், டெல்லி லாபிகளுக்கு பிறகு தமிழகம் மீண்டார். வருங்கால தமிழகம் என அதகளப்படுத்தினார்கள் உடன்பிறப்புகள்.  

ஆளுங்கட்சி வெற்றிபெற, எதிர்கட்சிகள் இயலாமையில் கையை பிசைய அல்லது சதியாலோசனைகள் மூலம் உள்ளாட்சி தர்பாரை தட்டிபறிக்க என திரைக்கதையில் ஏகப்பட்ட திருப்பங்ளை கொண்டது உள்ளாட்சி தேர்தல். சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை தக்க வைக்க, அல்லது பெற முடியாத செல்வாக்கை மீட்டெடுக்க களம் கண்டார்கள் கழக கண்மணிகளும், உடன்பிறப்புக்களும்.

இதற்கிடையே தங்களது பலத்தை னித்தனியே நிரூபிக்க தொடை தட்டிக்கொண்டு கிளம்பின எல்லா சாதிக்கட்சிகளும். அதுவரையில் அப்படியொரு மோதலையும், வாக்கு சீட்டின் நீளத்தையும் கண்டதில்லை தமிழக வாக்காளர்கள். சட்டமன்ற தேர்தலில் களமிறக்க முடியாத காந்தி நோட்டுகளை இந்த கபடிக்கு இறக்கினார்கள் எல்லா சொந்தங்களும். 

அதிரடிகளால் தடாலடி பண்ணும் ஜெயலலிதா இந்த முறை சட்டப்படிதான் நடவடிக்கை இருக்க வேண்டும் என யோசிக்க,  பல முன்னாள்களுக்கு பின்னால் இருந்த சகலத்தையும் சல்லடை போட்டு அலச, திடீர் தீபாவளி கொண்டாடியது தமிழக காவல்துறை.

அம்பலத்துக்கு வந்தன பல நில அபகரிப்புகள். சட்டப்படி சந்திப்போம் என்றார்கள் நிலத்தை பறித்தவர்கள். வழக்கு, வாரண்ட், கைது, ஜாமீன் என தினந்தோறும் நடந்த அரங்கேற்றங்களால் பல முன்னாள்களும் பணால் ஆனார்கள். பொன்முடி, கே.என்.நேரு. வீரபாண்டி ஆறுமுகம், என பல பாளையக்காரர்களும் பந்தாடப்பட்டார்கள் கிளை சிறைகளுக்கு. 

ஆட்சி மாறியதும் முதல் அடி வாங்கியது பள்ளிக்கூட குழந்தைகள்தான். சென்ற வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி இந்த வருடம் அனைத்து வகுப்புகளுக்கும் கொண்டு வரப்படுவதாக இருந்ததை நிறுத்திவைத்தார் ஜெயலலிதா. பழைய பாடத்திட்டமே செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியானதும் கொந்தளித்தார்கள் பெற்றோர்கள். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என வழக்கு செல்ல இரண்டு மாதங்களுக்கு மேல் பள்ளிக்கூடத்தில் சில்லாட்டம் ஆடினார்கள் குழந்தைகள். ஒரு வழியாக உத்தரவு வந்தாலும், இது பள்ளிக்கல்வியில் ஜெயலலிதா குத்திய கும்மாங்குத்து. 

சிக்கன்குனியா, மலேரியா, டெங்கு என எல்லா வகை காய்ச்சல்களுக்கு பிறகு தமிழகத்தில் அதிகம் பேருக்கு பிடித்த காய்ச்சல் ரஜினி காய்ச்சல்தான். 'ராணா' பட தொடக்கத்தில் தலைவருக்கே ஏற்பட்டது காய்ச்சல். தமிழகம் முழுவதும் மருந்து தின்றார்கள் ரசிகர்கள்.

பால்சோறு, மண்சோறு, அன்னதானம், அலகு காவடி என ரசிகர்கள் கவலை கண்ணீர்விட சிகிச்சைக்கு சிங்கப்பூர் சென்றார் ரஜினி. சிகிச்சைக்கு பின் நலத்தோடு திரும்பி ரசிகர்களுக்கு காட்சி தருவார் என்றால் அவ்வபோது மீடியா பிளாஷ்களில் மட்டும் முகம் காட்டியது ஏன் என்பது ரஜினிக்கு தான் வெளிச்சம். அலகு காவடி ரசிகர்களுக்கு ஏமாற்றமோ ஏமாற்றம்.  

வழக்கமாக மதுரை பற்றி படமெடுப்பவர்கள் மீனாட்சி கோவிலுக்கு பிறது திரையில் அதிகம் காட்டுவது அருவாளைத்தான். ஆடுகளம் கதை களத்தை காட்டியது. நீண்ட நாட்களுக்கு பிறகு பல தேசிய விருதுகள் அள்ளிவந்த படம் என தமிழ் திரையுலகு நம்பிக்கை கொண்டாடியது. 

நடிகர் தனுஷ் நடிப்பில் பின்னி பெடலெடுத்த படங்களில் இதுவும் ஒன்று. ஆடுகளத்துக்கு பிறகு தனுஷ் அதகளபடுத்திய மற்றொரு ஆட்டம் 'கொலவெறி' பாட்டு. உலகம் முழுவதும் கேட்டு ரசித்த இந்த பாட்டுக்கு அமிதாப் வரை லைக் கொடுக்க இந்த ஆண்டின் கடைசி நாட்கள் வரை சுற்றுப்பயண கால்ஷீட்தான் பாடலாசிரியருக்கு. 

பேருந்து கட்டணம், கூடங்குளம், முல்லை பெரியாறு, பரமகுடி சம்பவம் என இந்த வருடத்தின் வயிற்றுப்பாட்டு பிரச்னைகள் ஏராளம் என்றுதான் சொல்ல வேண்டும். மூன்றாவது கட்ட உண்ணாவிரத போராட்டம் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கூடங்குளம் அணுஉலை தொடங்கியே தீருவோம் என ரஷ்யாவுக்கு போன இடத்தில் கதைத்து வந்தார் பிரதமர்.

அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என குற்றஞ்சாட்டுகிறவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மக்கள் ஊர் முறை வைத்து உண்ணாவிரதம் இருப்பதற்கும், கோரிக்கைகள வைப்பதற்கும் மத்திய அரசு செவி சாய்ப்பதாக தெரியவில்லை.

கேரள அரசியல்வாதிகளின் பொய் ஆரவாரங்களில் இரண்டு மாநில உறவுகளை பாதித்த விவகாரம் முல்லை பெரியாறு அணை பிரச்னை. தமிழக நீராதாரமான பெரியாறு அணையை உடைப்பதற்கு கேரளா திட்டமிட, கொதித்துவிட்டது மொத்த தமிழகமும்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரையும் தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டதும், அதுவரையில் அமைதியாக இருந்த மொத்த தமிழகமும் பற்றியெறிந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த உணர்ச்சிகரமான நாட்களில் காஞ்சியில் செங்கொடி என்கிற தோழி தன்னை நெருப்புக்கு மாய்த்துக்கொண்டதுதான் சோகத்திலும் சோகம். பல போராட்டங்கள், சட்டமன்ற தீர்மானம், உயர்நீதிமன்ற தீர்ப்பு என பல நடவடிக்கைகளுக்கு பிறகு தற்போது தூக்குக்தண்டனை நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வருடத்தின் இன்னும் ஒரு சோகம் பரமகுடி துப்பாக்கிசூடு. தங்கள் தலைவர் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களிடம் போலீசார் கடுமையாக நடந்துகொள்ள, மூண்டது கலவரம். போலீசின் துப்பாக்கி சூடு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியது. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் காயம் ஆறாமல் விசாரனைக்கு ஒத்துழைக்கவில்லை இன்னமும்.

எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக தடுமாறிய தமிழனுக்கு ஒட்டுமொத்த அடியாக விழுந்தது பேருந்துகட்டணம், மற்றும் பால் விலை உயர்வுதான். இந்த ஒவ்வாமையில் கொஞ்சநாள் ஆட்சியை காய்ச்சிய தமிழன் பின்னர் சகஜமானது வழக்கமான தமிழர்களின் குணாதியசம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆகக் கடைசியாக ஆண்டு முடிவதற்கு சில நாட்களே இருக்கையில் இரண்டு புயல்களை சந்திக்க நேர்த்தை குறிப்பிடாமல் இந்த தொகுப்பை முடிக்க முடியாது.

ஒன்று, உடன் பிறாவா சகோதரி சசிகலாவை வீட்டுக்கு அனுப்பிய ஜெயலலிதாவின் நடவடிக்கை. சசி அண்ட் கோ மற்றும் அவருடன் கூடிய தொண்டரடிப்பொடி வகையறாக்களையும் கட்சியின் அடிமட்ட உறுப்பினர் பதவி வரை பிடிங்கி என ஜெ. எடுத்த அவதாரம் ஒரு அவரது சொந்த வாழ்க்கையில் எடுத்த மிகப்பெரிய முடிவு என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் புயலின் சேதாரங்கள் 2012-ல் ஆய்வுக்குப் பின் தெரிய வரலாம்.

இரண்டாவதாக, கடைசி இரு நாட்களில் தமிழகம் கண்ட சோகம் தானே புயல். கடலூரும், பாண்டிச்சேரியும் சிக்கி சின்னா பின்னமானதில் 33 பேர் இறந்தனர். பல நூறு கோடி மதிப்புக்கு பாதிப்பும் இருக்கிறது.

இந்தப் புயல் குறித்து முன்பே எச்சரிக்கை செய்யப்பட்டதால் பெருமளவு பாதிப்பு தவிர்க்கப்பட்டது என்றாலும், பேரிடர் நிவாரண குழு வேலையை வேகமாக முடுக்கியிருந்தால் இந்த அளவு பாதிப்பைகூட குறைத்திருக்க முடியும்.

'கடலூரையும், புதுச்சேரியையும் துவம்சம் செய்த புயல், ஒருவேளை சென்னையைத் தாக்கியிருந்தால்?'

இந்த எதிர்மறை சிந்தனை கொண்ட கோணத்தில் அரசு சிந்தித்து, பேரிடர்களைத் தாங்கக் கூடிய 'கட்டமைப்பு' வசதிகளை சரிசெய்ய வேண்டும்.

தானே... தமிழகத்துக்கு இயற்கை வழங்கிய இறுதி எச்சரிக்கையாக இருக்கட்டும்.