தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இங்கே யாருக்குத் தலை வெடித்ததோ இல்லையோ, 2012 ஏப்ரல் 13 அன்று வட கொரியா செலுத்திய நூறடி நீள ஏவுகணை கிளம்பி, ஒன்றரை நிமிடத்தில் வெடித்துச் சுக்கு நூறு ஆகியது.முன்னாள் அதிபர் இரண்டாம் கிம் சங் நூற்றாண்டு நினைவாக "யூன்ஹா-3' வானிலை ஆய்வூர்தியைச் செலுத்தியது. சீன எல்லையில் சோஹே தளத்தில் இருந்து சீறிப் பாய்ந்தது. அணு ஆயுதம் சுமந்து அலாஸ்கா அல்லது ஹவாய் வரை செல்லும் திறன் கொண்டதாம்.சீனாவோ சமீபத்தில் 800 கிலோமீட்டர் உயரத்தில் புவிசுற்றி வந்த தனது பழைய செயற்கைக்கோள் ஒன்றைப் பூமியில் இருந்தபடியே டி.எஃப்-21 ரக நடுத்தர வீச்சுக்கணையால் குறிவைத்து வீழ்த்தி இருக்கிறது.ஏறத்தாழ முக்கால் டன் எடை கொண்ட அந்தச் செயற்கைக்கோள், 20 லட்சம் துக்கடாக்கள் ஆகி விண்வெளியில் சிதறிற்று. கேட்டால் அமெரிக்கப் பெரிய அண்ணன் மட்டும் 1985-ஆம் ஆண்டு இப்படிச் செய்யவில்லையா என்று வழக்கமான அரசியல் விவாதம்வேறு.இயல்பாகவே ஏவூர்திகளின் எரிந்து முடிந்த பொறிகலன்கள் விண்ணில் கழற்றிவிடப்படும். நம் நாட்டில் காலாவதியான "விசா' வைத்துக்கொண்டு அயல்நாட்டினர் சுதந்திரமாகத் திரிவதைப்போல, விண்கலன் உதிரி பாகங்கள், வெளிப்பூச்சுகள், வெப்பக் கவச ஓடுகள், திருகாணிகள், எரிபொருள் குழாய்கள், ரப்பர் வளையங்கள் என எத்தனையோ சில்லறைப் பொருள்கள், விண்வெளியில் குப்பைகளாகத் தன்போக்கில் அலைந்து கொண்டுதான் இருக்கின்றன.விண்வெளி வீரர்கள் கைங்கரியமும் இதில் அடக்கம். அமெரிக்க முதல் விண்வெளி வீரர் எட்வர்ட் ஒயிட் அண்டவெளியில் இறங்கியபோது அவரது கையுறை விண்ணில் கழன்று தொலைந்து போயிற்றாம். ஜெமினி-10 விண்கலப் பயணி மைகேல் காலின்ஸ் கொண்டு சென்ற காமிரா கை தவறி புவிசுற்றுப்பாதையில் விழுந்துவிட்டதாம்.பதினைந்து ஆண்டுகளாக ரஷியாவின் மிர் விண்சுற்று நிலையத்துக்குப் பலர் சென்று குடியேறினர். அவர்கள் இன்றைய அடுக்குமாடிக் குடியிருப்போர் சுபாவம் கொண்டவர்களோ என்னவோ? பால்கனியில் நின்றபடி எச்சில் தட்டுகள், குளிர்பான டப்பாக்கள், பாட்டில்கள் எல்லாம் கீழ்வீட்டுக் கொல்லையில் வீசி அழகுபடுத்துவதைப்போல, மிர் நிலைய வீரர்களும் திருப்பணி செய்தார்களாமே.தங்கள் கைக்கருவிப் பைகளையும், பல் தேய்க்கும் புருசுகளையும் விண்ணில் எறிந்து வந்ததாக இப்போது தெரிவிக்கிறார்கள். இந்திய வம்சாவளி மங்கை சுனிதா வில்லியம்ஸ் கூட தனது பங்குக்குக் காமிராவை விண்ணில் நழுவ விட்டுவிட்டாராம்.1981-ஆம் ஆண்டு ஷேஃப்டர் கணிப்புப்படி 5000 துண்டுத் துக்கடாக்கள் விண்ணில் சுற்றித் திரிகின்றன என்று அறிவிப்பானது. 1990-ஆம் ஆண்டுகளில் செலுத்தப்பெற்ற 28,000 விண்கலன்களில் 8,500 உதிரிகள் விண்வெளியிலேயே தங்கி விட்டனவாம்.இதுபோல 22,000 விண்வெளி ஓட்டை உடைசல்கள் பூமிக்கு வெளியே சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன என்ற அதிர்ச்சித் தகவல். அமெரிக்காவின் வான்கார்டு என்ற செயற்கைக்கோள் செயல் இழந்தும் கடந்த 50 ஆண்டுகளாக விண்ணில் "சவக் கிடங்குப் பாதை'யில் சுற்றி வருகிறது.அதன் ஆவி இன்னும் 240 ஆண்டுகள்கூட அங்கேயே அலையுமாம்.
ஐரோப்பாவின் "என்விசாட்' என்ற சுற்றுச்சூழல் செயற்கைக்கோள் இன்று சுற்றுச்சூழலுக்கே மாசு ஆகிவிட்டது. இந்தத் தமிழ்ப் புத்தாண்டிற்குத் தலைநாள் தான் அது விண்ணில் செயல் இழந்து திரிகிற அழுக்கு அறிக்கை வெளிவந்தது.அப்படியானால் செயற்கைக்கோள் சுற்றுப்பாதைகளில் விபத்துகள் நிகழாதா? தமிழ்நாட்டில் அன்றாடம் நடக்கும் சராசரி 50 சாலை விபத்துகளில் 15 பேராவது பரம பதம் அடைகின்றனராம். ஆனால், விண்வெளியில் ஏறத்தாழ 80 லட்சத்துக்கு ஒன்று என்பதுதான் விபத்து வாய்ப்பு. இருந்தாலும், 2009-ஆம் ஆண்டு ஒரே ஒருமுறை விண்வெளியில் அமெரிக்காவும் ரஷியாவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.இரிடியம்-33 என்ற செயற்கைக்கோளும், காஸ்மாஸ்-2251 விண்கலமும் மோதியது. மண்வெளியிலோ தினம் மண்டை உடைப்புகள்தாம். அண்டை நாடுகளின் அறிக்கைப் போர்கள், உள்நாட்டின் அக்கப்போர்கள். போகட்டும், இன்னொரு செய்தி. ரஷியாவின் "காஸ்மாஸ்-954', விண்வெளியில் செயல் இழந்தபோது, அதன் அணுக்கருத் தண்டுகள் விடுவிக்கப்பட்டு, பூமிக்கு அப்பால் அதி உயரப் பாதைகளில் தள்ளிவிடப்பட்டன. 3.8 டன் வெற்றுக் கூடு மட்டும் 1978 ஜனவரி 24 அன்று கொஞ்சம் கதிரியக்கப் பொருள்களுடன் வட மேற்கு கனடாவில் வந்து விழுந்தது. அமெரிக்க அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை வேவு பார்க்க "ரோர்சாட்' என்ற ரகசியக் கடற்படைத் திட்டத்தின்கீழ் செலுத்தப்பட்ட ஏவுகலன் அது. இவ்வகையில் அணுக்கரு உந்தும அமைப்பு கொண்ட "காஸ்மாஸ்-1402' விண்கலமும் பூமிக்குள் விழுந்ததே. இந்த சர்வதேசக் கூத்து எல்லாம் யாரிடம் முறையிடுவது?இந்த விண்வெளிக் குப்பைகள் 700 கோடி மக்கள் வாழும் பூமியின் பரப்பளவை ஒப்பிடும்போது ஒருவர் தலையில் வந்து விழுவதற்கான வாய்ப்பு 3200-இல் ஒன்றுதானாம்.இருந்தாலும், 1997-ஆம் ஆண்டு ஓக்ளா நாட்டு துல்சா நகரில் லோத்தி வில்லியம்ஸ் என்னும் பெண்மணியின் தோளில் ஒரு சோடா பாட்டில் அளவு சிறு பொருள் மோதியது.
உண்மையில் 1996-ஆம் ஆண்டு செலுத்தப்பெற்ற டெல்டா - 2 ஏவூர்தியின் உடைந்த உதிரிபாகம். இதற்காகப் பாதுகாப்புத்துறை, செல்வி வில்லியம்ஸிடம் எழுத்துப்பூர்வ மன்னிப்புக் கோரியது உபகதை.அவ்வாறே, ஒரு பள்ளிப் பேருந்தின் எடை (6 டன்) கொண்ட "யு.ஏ.ஆர்.எஸ்' என்ற அமெரிக்க "உயர் வளிமண்டல ஆய்வுச் செயற்கைக்கோள்' 2005-ஆம் ஆண்டிலேயே செயல் இழந்தது. காதும் காதும் வைத்தமாதிரி, 2011 செப்டம்பர் 24 அன்று காலை மேற்கு கனடாவில் கல்கரி என்னும் இடத்திற்கு அருகில், நல்ல வேளை தலையில் விழாமல் தரையில் விழுந்தது.அதன் உடைந்த 26 டைட்டானிய உலோகத் துண்டங்கள் மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்து வந்தது பலருக்கும் தெரியாது. இந்த உடைசலின் மிகப்பெரிய துண்டு ஏறத்தாழ 140 கிலோ. இரண்டு ஆள் கனம் என்றால் பாருங்களேன்.அதற்கு அடுத்த மாதமே, விண்வெளியின் எக்ஸ்-கதிர் மூலங்களை ஆராய்ந்து வந்த "ரோசாட்' என்ற ராண்ட்ஜன் செயற்கைக்கோளும் 2011 அக்டோபர் 23 அன்று பூமியில் விழுந்தது. அதுவும் நம் வங்காள விரிகுடாக் கடலில்தான். நமக்குத்தான் அமைச்சர்களின் நீதிமன்ற வழக்குகளில் கவனம் செலுத்தவே நேரம் போதாதே.ஆனால், ரோசாட் விஷயத்தில் புலன் விசாரணை நடக்கிறது. அது இயல்பான மரணம் இல்லையாம்.அமெரிக்காவின் கொட்டார்டு விண்வெளி மையத்தில் எக்ஸ்-கதிர் விண்இயற்பியல் பிரிவின் கணிப்பொறி மென்பொருளுக்குள் ரஷியா திணித்த தீவிரவாதத் தகவல் தாக்குதல் என்கிற கோணத்திலும் ஆய்வு நடக்கிறது.
இதற்கு மத்தியில், அமெரிக்கா "ஸ்பேஸ் எக்ஸ்' போன்ற தனியார் நிறுவனங்களிடம் இருந்து டிராகன், ஃபால்கன் என்று எல்லாம் உள்நாட்டு நேரடித் தயாரிப்புகளை வாங்கி வருகின்றன. நாமோ பீரங்கி ஆகட்டும், போர் வாகனம் ஆகட்டும், இடைத் தரகர்களிடம் உறவாடி, உடன்படிக்கை செய்து சுவிஸ் வங்கியில் சேமித்து வைப்பதே பரம்பரைப் புத்தி.போர்க்குற்றம் சுமத்தப்பட்ட அண்டை நாடு, நம் வீட்டு அடுப்படிப் புகை காற்றில் கலந்தால் தனக்கு மூச்சு முட்டும் என்று சிணுங்குகிறது.எப்படியோ, 2012 "பன்னாட்டுக் கூட்டுறவு ஆண்டு' என்று அறிவிப்பாகி உள்ளதுதான் மிச்சம். உலக ஒற்றுமையை வலியுறுத்தும் ஆண்டாம். ஆனால், சர்வ நாடுகளின் மண்டைக்குள்ளும் கத்திரி வெயில்.
உலக அளவில் இன்று முதல் பத்து ஆயுதத் தொழில் நுட்பங்களை வரிசைப்படுத்துவோம்.
1. தகவல் தொடர்புகளைக் கண்ணுக்குத் தெரியாமல் அழிக்கும் தானியங்கி இயந்திரங்கள்,
2. கண்புரை அகற்ற உதவும் நுட்பத்தின் மறுவடிவம் - இன்று தொலைவானில் ஏவுகணைகளைச் சிதறடிக்கும் லேசர்,
3. விண்வெளியில் மிதந்தபடி எதிரி விமானங்களை நிலைகுலையச் செய்யும் டங்க்ஸ்டன் ஈட்டிகள்.
4. காற்றைவிட 5 மடங்கு அதிவேகம் கொண்ட ஹைப்பர் சானிக் விமானங்கள்.
5. கனன்ற சிகரெட் மாதிரி எதிரிகள் மேல் தோலில் சூடு வைக்க மில்லி மீட்டர் அலைநீளக் கதிர்வீச்சுக் கற்றை.
6. அணு ஆயுதங்கள்,
7. மேனி நோகாமல் உள் புண்ணாக்கும் மின்பொறித் துப்பாக்கிகள்,
8. கணிப்பொறியின் மூளைக்குள் அதிரடி மின்துடிப்பு ஊட்டி வெடிக்கச் செய்யும் "மின்னணு குண்டுகள்',
9. ஒவ்வொரு கட்டமாக எதிரியை மோப்பம் பிடித்துத் தாக்கும் அதி நவீன ஏவுகணைகள்,
10. தகவல் தொடர்புக் குறுக்கீட்டுத் தளவாடங்கள்.
இத்தனைக்கும் நடுவில், இந்தியாவின் பஞ்சாக்னி, அதுதான் "அக்னி-5' வெற்றி. நீர் மூழ்கி அணு ஆயுதக் கப்பல் வெள்ளோட்டம் வேறு. அது சரி, இந்தியா அகிம்சை நாடு ஆயிற்றே, நமக்கேன் ஆயுதம் என்றுதானே கேட்கிறீர்கள்?
பன்னாட்டுக் கூட்டுறவு ஆண்டின் கோலாகலம்! காந்தியிடமும் கைத்தடி இருப்பதில் தப்பு இல்லையே.
ஜெனகராஜ் பழனிசாமி
ஜெனகராஜ் பழனிசாமி
No comments:
Post a Comment