Total Pageviews

Sunday, 11 December 2011

முல்லைப் பெரியாறு; கேரளத்தின் பிடிவாதமும், தமிழகத்தின் நியாயமும்!



ஒன்றுபடுங்கள்!
புனல் மின்நிலையத்துக்காக கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணைக்கு, போதுமான தண்ணீர் கிடைக்காததால் மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக, முல்லைப் பெரியாறு அணைக்கு கேரளம் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியது என்பதுதான் இந்தப் பிரச்னையின் அடிப்படையே.
 
முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு ஏற்பட்டபோது, வல்லுநர்கள் குழு இந்த அணை பாதுகாப்புடன் இருப்பதைக் கூறியும்கூட, கேரள அரசு வேண்டுமென்றே அச்சம் தெரிவித்தது. மேலும் பல கோடி ரூபாய் செலவில் அணை பலப்படுத்தப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அணைக்குச் சேதம் ஏற்படாத வகையில் புதிய தொழில்நுட்பத்தில் அணையைப் பலப்படுத்தினார்கள் என்பதுதான் உண்மை.
 
நீதிமன்றம் குறிப்பிட்ட அனைத்துப் பாதுகாப்புப் பணிகளையும் செய்து முடித்து, முல்லைப் பெரியாறு பேபி டேம் பகுதியில் மிகச் சிறிய பணியையும் செய்து முடிக்க முற்பட்டபோது, அதை முடித்துவிட்டால் நீதிமன்றம் கூறிய அனைத்தையும் தமிழகம் செய்துவிட்டதாக ஆகிவிடுமே என்று அஞ்சி, கேரள வனத்துறை அதிகாரிகளைக் கொண்டு, அந்தப் பணியைத் தடுத்து வருகிறார்கள் கேரள அரசின் தரப்பினர்.
கேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?
 
படித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ளாத நிலையில், பாமரருக்கு எங்கே புரியும் என்கின்ற நினைப்பைத் தகர்த்தெறிந்துள்ளது தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்துள்ள, அரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம். முல்லைப்பெரியாறு- பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் இணைய தளத்திலும் [http://www.youtube.com/watch?v=l7uJ1nhXZ_A] காணக் கிடைக்கிறது.
 
 
இதற்கு மேலாகச் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிய பாமரனும் புரிந்துகொள்ளும் வகையிலும் இன்னொரு ஆவணப்படம் எடுக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. இந்த ஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படத்துக்கு முன்பாக திரையிடக் கட்டாயப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளிலும் கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கிராமங்களில் திரையிடலாம்.
 
முல்லைப் பெரியாறு பிரச்னையை வேண்டுமென்றே பெரிதாக்கிக் கேரளம் பீதியைக் கிளப்புவதற்கு அடிப்படைக் காரணம், இடுக்கிக்கு அதிக நீர்வரத்து ஏற்படுத்தி மின்சார உற்பத்தியைக் கூட்ட வேண்டும் என்பதால்தான். தமிழகம் தாங்களே இன்னொரு அணையைக் கட்டி விடுகிறோம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியே தடுப்பதற்காக வேறு அணை கூடாது என்கிற கோஷத்தையும் எழுப்பி விட்டார்கள்.
 
29.11.2011 தினமணி தலையங்கத்தில் ஒரு பகுதி.
 
142 அடி தண்ணீர் தேக்குவதை உறுதி செய்யுங்கள்!
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் அதிகாரமிக்க குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு பல்வேறு வழிகளில் வலியுறுத்தி வருகிறது.
 
மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரின் பரிந்துரைப்படி 1980 முதல் 1994 வரை முல்லைப் பெரியாறு அணையை தமிழகம் மிகச் சிறப்பாக பராமரித்து வந்தது. இதனால் அணை புதியதுபோல உள்ளது. அதனால் தான் 2006-ஆம்ஆண்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக அதிகரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் வழிகாட்டுதல்படி அணையின் உறுதித்தன்மை குறித்துப் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இதற்காக தமிழக அரசு ரூ. 1.38 கோடி ஒதுக்கியது.மேலும் உங்கள் கடிதத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 22 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்திய வானியல் மையத்தின் தகவல்களின்படி கடந்த நான்கு மாதங்களில் அந்தப் பகுதியில் நான்கு லேசான நிலநடுக்கங்களே ஏற்பட்டுள்ளன. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. அதுபோல வெள்ளத்தாலும் அணை உடையும் ஆபத்து இல்லை. எந்த விதத்தில் பார்த்தாலும் அணை வலுவாக உள்ளது என்பதே உண்மை.
 
ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது. எனவே, உண்மை நிலைக்கு மாறாக மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க வேண்டியது நமது கடமையாகும்.எனவே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதை உறுதி செய்ய வேண்டும்' என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
 
 
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட
ஒத்துழைப்புத் தரும்படி கேட்டு கேரள முதல்வர் எழுதிய கடிதத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதிய பதில் கடிதத்தின் ஒரு பகுதி.
அ.வீரப்பன்
முன்னாள் தலைமைப் பொறியாளர்,
பொதுப்பணித்துறை
முல்லைப் பெரியாறு அணை 1895 ஆம் ஆண்டு கர்னல் பென்னி குயிக் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட பின்பு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அணை பலவீனமாக இருக்கிறது என்று தொடர்ந்து சொல்லப்பட்ட குற்றச்சாட்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, 1981 முதல் 1994 வரை மூன்று முறை அணை பலப்படுத்தப்பட்டது.
24 அடி அகலம், 3 அடி உயரத்தில் 1200 நீளத்துக்கு 12 ஆயிரம் டன் எடையுள்ள கான்கீரிட் போடப்பட்டு அணை பலப்படுத்தப்பட்டுள்ளது.
அணையின் பின்புறத்தில் தாங்கு அணையாக 135 அடி உயரத்தில் 1700 அடி நீளத்தில் 33 அடி அகலத்தில் 3 லட்சம் டன் கான்கீரிட் கொண்டு பிணைக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்படும் என்ற பயத்தைப் போக்கும் வகையில் அணையின் 1200 அடி நீளத்தில் 9 அடி இடைவெளி விட்டு 4 அங்குல விட்டத்தில் 95 துளைகள் இடப்பட்டு, அதிலிருந்து கம்பிகளை இழுத்து அணையின் கீழ்மட்டத்தில் 30 அடி கீழே உள்ள பாறைகளின் உள்ளே சொருகி, அதைக் கான்கீரிட் கலவையைக் கொண்டு உறுதிப்படுத்தி 20 டன் எடையைத் தாங்கும் அளவுக்கு இறுக்கி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாட்டால் நிலநடுக்கம் ஏற்பட்டாலும், அணைக்குப் பாதிப்பு வராது. எனவே அணை முன்பைவிட 3 மடங்கு வலுவாக உள்ளது. அணை பலவீனமாக உள்ளது என்ற கேரள அரசின் கூற்று அப்பட்டமான பொய்யாகும்.
நிலநடுக்கம் தொடர்பாக இந்திய தர நிர்ணயம்
2002 - இல் வெளியிட்ட தகவல்படி முல்லைப் பெரியாறு அணை, இடுக்கி அணை, சென்னை நகரம் உள்ளிட்டப்பகுதிகள் மண்டலம் - 3இல் உள்ளன. அதாவது 3.5 முதல் 4.2 வரை ரிக்டர் அளவுகோலில் நிலஅதிர்வு - நிலநடுக்கம் பதிவாகும் பகுதிகள் எனக் கூறுகிறது. இந்த நில அதிர்வால் அணைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அப்படியே அணை உடைந்தாலும், அந்த நீர் இடுக்கி அணைக்குத்தான் செல்லும்.
இங்கே கவனிக்க வேண்டியது பெரியாறு அணை கடல் மட்டத்திலிருந்து 2861அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. பாம்பனார் 3402அடி, ஒலப்பாறை 3648 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஆனால் கீழே இருக்கும் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மேலே உள்ள பகுதிகளுக்குப் பாயும் என்று நீரியல் விதியையே கேரளம் மாற்றிக் கூறுகிறது.
மேலும் அணையின் பலம் பொறியியல் ரீதியான ஒன்று. பொறியாளர்கள் பார்வையில் அணை உடையவே உடையாது. கேரளத்தைச் சேர்ந்த பொறியாளர்களிடம் விவாதிக்கவும் தயாராகவும் இருக்கிறோம்.
1976 ஆம் ஆண்டில் முல்லைப் பெரியாறு அணையின் கீழே 50 கி.மீ. தூரத்தில் இடுக்கி அணையை 555 அடி உயரத்தில் கேரள அரசு கட்டியுள்ளது. இது முல்லைப் பெரியாறு அணையைவிட மூன்றரை மடங்கு பெரியது. முல்லைப் பெரியாறு அணையின் கொள்ளளவைவிட 7 மடங்கு அதிகம்.
ஆனால் இடுக்கி அணை நீர்ப்பாசன அணை அல்ல. புனல் மின்சாரம் தயாரிப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள அணை. ஆனால் அதற்குத் தண்ணீர் முல்லைப் பெரியாறு அணையிலிருந்துதான் வர வேண்டும். தண்ணீர் வராவிட்டால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. எனவே முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட உயரத்தைக் குறைத்தால்தான் இடுக்கி அணைக்குத் தண்ணீர் கிடைக்கும். இதற்காகவே பல பொய்யுரைகளை கேரள அரசு பல காலமாகப் பரப்பி வருகிறது.
23.10.1979 மலையாள மனோரமா இதழில் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது என்று எழுதப்பட்டிருந்தது.
அதற்குப் பின்பு அணையின் நீர்மட்டம் 152 அடி உயரத்திலிருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை இவ்வளவு பலமாக இருந்தாலும், கேரள அரசு அணை பலவீனமாக உள்ளது என்று தொடர்ந்து கூறி வருகிறது. வழக்கும் தொடர்ந்தது.
27.2.2006 இல் உச்சநீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்காக கேரள அரசு தனது சட்டப் பேரவையில் "கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு (சட்ட திருத்த) மசோதா 2006' என்ற பெயரில் நிறைவேற்றி உள்ளது. இதன்படி கேரள அரசின் அனுமதி இல்லாமல் கேரளத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டத்தை பிற மாநில அரசுகள் அதிகரிக்கக் கூடாது. இது உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை மீறிய செயலாகும்.
மேலும் முல்லைப் பெரியாறு அணையில் உள்ள தமிழகத்தின் பாரம்பரிய உரிமையைப் பறிக்க வேண்டும் என்பதற்காக அது 3 விதமான தடைகளை எழுப்ப முயற்சி செய்கிறது.
1886}இல் திருவாங்கூர் சமஸ்தானத்துடன் பிரிட்டிஷ் அரசாங்கம் செய்து கொண்ட 999 ஆண்டு ஒப்பந்தத்தை செல்லாததாக்குவது.
இரண்டாவதாக, நிலநடுக்கம் உள்ள பகுதி என்று கூறி அணையை உடைக்க முயற்சிப்பது. அல்லது நீர்மட்டத்தைக் குறைக்க நினைப்பது.
மூன்றாவதாக, பெரியாறு பகுதியில் வனவிலங்குகளுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறுவது.
இதில் பிரிட்டிஷார் காலத்திய 999 ஆண்டுக்கான ஒப்பந்தம் அரசியல் சட்டப்படி சுதந்திரம் அடைந்த பின்பும் தொடரும் என்பதே உண்மை.
சுற்றுச் சூழல் அமைச்சகம் செய்த ஆய்வின்படி முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அங்குள்ள மரங்களுக்கும், விலங்கினங்களுக்கும் நன்மையே ஏற்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் மேம்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் உச்சநீதிமன்றத்தால் அதிகாரம் அளிக்கப்பட்ட ஆனந்த் கமிட்டியிடம் கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு 366 மீட்டர் கீழே புதிய அணை ஒன்று கட்டப் போவதாகத் திட்ட அறிக்கை ஒன்றை அளித்தது. அந்த அணையில் இருந்து போதுமான தண்ணீர் இருக்கும்பட்சத்தில் தண்ணீர் பிறமாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று பக்கம் 23 இல் கூறப்பட்டுள்ளது. ஆனால் பக்கம் 37 இல் தமிழகத்துக்கு முல்லைப் பெரியாறு அணையில் எந்தவிதமான பாரம்பரிய உரிமையும் இல்லை என்று கூறியுள்ளது. இதன்மூலம் நமக்குத் தெரிவது என்னவென்றால் தமிழகத்துக்குப் பாரம்பரியமாகக் கிடைத்துவந்த நீரைத் தராமல் தடுத்து நிறுத்துவதற்கான சதித் திட்டத்தை கேரள அரசு தீட்டியுள்ளது என்பதுதான்.
இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. 2 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு நீரின்றிப் போய்விடும். 10 லட்சம் மக்களுக்குக் குடிநீர் கிடைக்காமல் போய்விடும்.
தமிழக மக்கள் கட்சி வேறுபாடின்றி இந்தப் பிரச்னையில் ஒன்றுபட்டு தங்களுடைய எதிர்ப்பை வலிமையாகக் காட்டுவதுதான் கேரள அரசின் சதித் திட்டத்தை முறியடிக்கும் ஒரே வழி.
 
 
வைகோ : பென்னி குயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணை 7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் உடையாத அளவுக்குப் பலம் வாய்ந்தது. கேரளத்துக்கு அரிசி உள்பட அனைத்து உணவுப் பொருள்களையும் வழங்கி வருகிறோம். ஆனால் கேரளம் இதுவரை நியாயமாக நடந்து கொள்ளவில்லை. முல்லைப் பெரியாறு அணையை உடைப்போம் என கேரளம் கூறுகிறது. அப்படி உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும். இந்திய ஒருமைப்பாட்டைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு.
 
 
ஆர்.காந்தி , நிலம், நீர் சங்கம் :
கேரள அரசியல்கட்சிகளின் சுயநலத்துக்காக முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை அரசியலாக்கப்படுகிறது. கேரளத்தவர் பரப்பும் பொய்ப் பிரச்சாரத்தை தகர்க்க நாம் தயங்கக் கூடாது. இறுதிவரை தமிழர்கள் ஒன்றிணைந்துப் போராட வேண்டும்.
 
 
பழ.நெடுமாறன் :
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தில்லியில் இரு மாநில அதிகாரிகள் மத்தியில் நடைபெறவிருந்த பேச்சு வார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை எனத் தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.
இருமாநில முதல்வர்களையும் அழைத்துப் பேச வேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங் கேரள முதல்வரை வலியுறுத்தி இருப்பதும் சூழ்ச்சிகரமானது. மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டால், அதைக் காரணம் காட்டி உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்க இருப்பதைத் தடுத்துவிடலாம் என்ற திட்டத்துடன் கேரளம் விரித்த வலையில் சிக்க மறுத்த தமிழக அரசைப் பாராட்டுகிறேன். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை எந்தக் காரணத்தைக் கொண்டும் முதல்வர்களுக்கு இடையிலோ, அதிகாரிகள் மட்டத்திலோ, எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இணங்கக் கூடாது.
 
 
செல்வா ,பொறுப்பாளர், தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம். :
முல்லைப் பெரியாறு அணை, கம்பம், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைப் பாதுகாக்கக் கட்டப்பட்டதாகும். அந்த அணை இருக்கும் இடம் தமிழகத்துக்குச் சொந்தமானது என்பதற்கான வரலாற்றுச் சான்று உள்ளது. எனவே அந்த இடத்தை மீட்க அரசாங்கத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளோம்.
அத்துடன் தமிழ்நாட்டின் எல்லைகளை மறுவரையறை செய்து வரலாற்றுப்பூர்வமான நமது தமிழக பகுதிகளை மீட்க வேண்டும்.
 
கே.எஸ். இராதாகிருஷ்ணன் : கேரள மக்கள் பலர் தமிழகத்தில் வணிகம் செய்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து அரிசி, சிமெண்ட், மணல், வைக்கோல், மீன், இறைச்சி, காய்கறிகள் என அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் பெற்றுக்கொள்ளும் கேரளம், கொஞ்சமும் மனிதாபிமானமற்ற முறையில் நதிநீர்ப் பிரச்னைகளில் நடந்துகொள்வதுதான் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
 
 
இதனால் யாருக்கு லாபம்?
 
கேரள எல்லையில் குமுளி அருகே சுமார் 80,000 பேர் போலீஸாரின் தடையுத்தரவை மீறி பேரணி[ 11/12/2011] நடத்தியதும், போலீஸார் தடுத்து நிறுத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பணியில் இருந்த போலீஸாரால் இவர்களைத் தடுக்க முடியவில்லை என்றும்கூட செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் பேரணியை பொதுமக்கள் நடத்தினார்கள்; இதை அரசியல் அமைப்புகள் நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. நேற்றைய தினமும்[ 11 Dec 2011] சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் பேரணி நடத்தி, எல்லையைக் கடக்க முயன்றுள்ளனர். இவர்களில் 6,000 பேர் மோட்டார் பைக்குகளில் வந்ததாகச் செய்திகளில் குறிப்பிடப்படுகிறது.
 முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில மக்களின் நலன் கருதி எந்தவொரு பிரிவினை சக்திக்கும் இடம் தராமல் இருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பத்திரிகை விளம்பரங்கள் மூலமாக வேண்டுகோள் விடுத்த பின்னர், இத்தகைய பேரணியை அதிமுகவினர் நடத்தியிருக்க வாய்ப்பில்லை. கட்சித் தலைமையை மீறி இத்தகைய பேரணியை நடத்தவும், மறைமுகமாக இயக்கவும்கூட எந்தவொரு அதிமுக மாவட்டச் செயலருக்கும் துணிச்சல் கிடையாது என்பது நிச்சயம். அமைச்சர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.
 
 அவ்வாறாக அரசியல் சார்பு இல்லாமல் இந்த அளவுக்குப் பெருங்கூட்டம் ஒரு பொது நலனுக்காகத் திரள்கிறது என்பது உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும். இருப்பினும், கேரள மக்களையும் அரசையும் மேலும் எரிச்சலூட்டவும், ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதலை முடுக்கிவிடவும்தான் இந்தப் பேரணியும் அத்துமீறல் ஊர்வலமும் பயன்படுமே தவிர, நிச்சயமாக முல்லைப் பெரியாறு பிரச்னையைத் தீர்க்க உதவாது. இதுபோன்ற செயல்கள் இரு மாநில நல்லுறவை மேலும் சிக்கலாக மாற்றும்.
 
 கேரள மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களுக்குத் தமிழகத்தையே சார்ந்துள்ளனர். கறிக்கோழி, முட்டை ஆகியன மட்டுமே ஆண்டுக்கு ரூ.1,780 கோடிக்கு தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதே அளவுக்கு நெல்லும் பிற தானியங்களும் செல்கின்றன. கேரள மாநிலத்துக்கு எந்த வாகனமும் செல்லக்கூடாது என்று மறித்தால் அல்லது அத்தகைய சூழ்நிலையை உருவாக்கினால், அதனால் பெரும் இழப்பைச் சந்திக்கப்போவது தமிழர்களும்தான்.
 கேரள மாநிலத்தவர் தமிழகத்தை நம்பாமல் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்து வாழ்ந்துவிட முடியும் என்றாலும், கர்நாடக மாநிலத்திலிருந்து பொருள்களை வரவழைப்பதில், செலவு அதிகம். இதனால் நெல், காய்கறி, கறிக்கோழி, முட்டை ஆகியவற்றுக்கு கேரள மக்கள் தற்போது கொடுக்கும் விலையைவிட 50 விழுக்காடு அதிகமாகக் கொடுக்கும் நிலைமை உருவாகும். இதைக் கேரள மக்கள் விரும்பவில்லை. விருப்பப்படவும் மாட்டார்கள்.
 
 
 முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், அணை நீரால் பயன்பெறும் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளைக் காட்டிலும் மிக அக்கறையாகவும்; அரிசி, முட்டை, மாமிசம் பெற தமிழகத்தை நம்பியிருக்கும் கேரள மக்களைக் காட்டிலும் அதிக ஆவேசமாகவும், யாரோ சிலர், ஏதோ ஒரு சக்தி, இந்த விவகாரத்தில் கூச்சல்போட்டு, அக்கறையாக மோதலை உருவாக்கப் பார்க்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.இந்தப் பிரச்னை போதாதென்று, நாமக்கல் மாவட்டக் கல்லூரிகளில் பயிலும் கேரளத்து மாணவர்களைத் தமிழர்கள் தாக்கியதாக, ஒரு மலையாளப் பத்திரிகையில் ஒரு செய்தி வெளியாகி, கேரளத்தில் உள்ள பெற்றோர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. ஆனால், அந்தச் செய்தி பச்சைப் பொய் என்பதே உண்மை.
 இதே மலையாளப் பத்திரிகைதான், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற செய்தியை மிகைப்படுத்தி, கேரளத்தில் இந்த அணைக்கு எதிரான பிரசாரத்தை முதன் முதலாகத் தொடங்கி வைத்தது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
 
 
 முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது என்பதும், நிலநடுக்கம் ஏற்பட்டு அணை உடைந்தாலும், 50 கி.மீ. தொலைவில் உள்ள இடுக்கி அணை அனைத்து நீரையும் உள்வாங்கி நிற்கும் என்றும் கேரள அரசின் நீர்வளத் துறைக்கு நன்றாகத் தெரியும். இடுக்கி அணையில் புனல் மின்சாரம் தயாரிக்க இயலவில்லை என்பதால்தான் இந்த அணை மீது கேரள அரசுக்குக் கோபம் என்று நாம் நம்பிக்கொண்டிருந்த வேளையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ள இன்னொரு கருத்து, இப்பிரச்னையின் வேறொரு பரிமாணத்தைக் காட்டுகிறது.
 
 ""முல்லைப் பெரியாறு அணையின் நீர்உயரம் 136 அடியாக இருக்கும்போது நீர்ப்பரப்பு 4,678 ஏக்கர். அணையில் 155 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கும்போது நீர்ப்பரப்பு 8,591 ஏக்கர். அதாவது 3,913 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த பல ஆண்டுகளாக நீரில் மூழ்காமல் இருக்கிறது. இந்தப் பகுதிகளில் கேரளத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து தங்கும் விடுதிகள் மற்றும் கட்டடங்கள் கட்டியுள்ளனர். 136 அடிக்கு மேலாக தண்ணீரைத் தேக்கினால் இந்த ஆக்கிரமிப்புப் பகுதியில் கட்டப்பட்ட விடுதிகள் தண்ணீரில் மூழ்கும். முல்லைப் பெரியாறு அணையைச் செயலிழக்கச் செய்ய இதுவும் ஒரு காரணமாக சிலர் தெரிவிக்கின்றனர்'' என்று முதல்வர் கூறியுள்ளார்.
 
 
 சுமார் 4,000 ஏக்கர் பரப்பில் ரிசார்ட் போன்ற விடுதிகள் கட்டியுள்ளவர்கள் யார்? இவர்களின் பின்புலம் என்ன? என்பதைப் பற்றி விசாரித்தால், முல்லைப் பெரியாறு அணையால் யாருக்கு இழப்பு, அதனால் யாருக்கு ஆத்திரம் என்பது வெளிப்படும்.


 நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புவது, மாநிலங்களுக்கிடையே உள்ள உறவு சீர்கெடுவது இந்திய ஒற்றுமைக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்பதைத்தான். இந்தப் பிரச்னையில் ஏன் தமிழக, கேரள அரசுகளை விடவும் அதிக அக்கறையும் கவலையும் கொள்ள வேண்டியது மத்திய அரசுதான். இது வெறும் நதிநீர்ப் பிரச்னை அல்ல; இந்திய ஒற்றுமை சம்பந்தப்பட்ட பிரச்னை, நினைவிருக்கட்டும்!
 
 தமிழர்களின்  வளம் திட்டமிட்டு பறிக்கப்படும் வல்லாதிக்க சதிக்கு எதிராக ஒன்று திரள வேண்டியது காலத்தின் கட்டாயம். இப்போதும் கூட காலம் தாழ்ந்துவிடவில்லை. தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுவோம். " ஒன்றுபடுங்கள் வென்றுவிடுங்கள்."

Saturday, 3 December 2011

கல்விமுறை சரியில்லை!?

தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகள் பெறுவதைப் போல, தேர்விலும் பணம் கொடுத்து தேர்ச்சி பெறுவது இன்றைய உயர்கல்வி உலகில் மிக இயல்பான செயலாக மாறிவிட்டது.
 
அண்மையில் பொறியியல் கல்லூரியில் பல பாடங்களில் தேர்ச்சி பெறாமல் இருக்கும் தனது தம்பிக்கு மதிப்பெண் போட்டுக்கொடுத்து தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக, பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு பெண்மணி ஓர் உதவிப் பேராசிரியருக்கு கையூட்டாக ரூ.3 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், ஆனால் அந்த கல்லூரி ஆசிரியர்ஏமாற்றிவிட்டார் என்றும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தச் செய்தி ஏற்படுத்திய பரபரப்பின் காரணமாக, பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் இது குறித்து பேச வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். தங்கள் பல்கலைக்கழகத்தில் இத்தகைய முறைகேடுகள் இல்லை என்றும் விடை திருத்தும் பணி முறைகேடுக்கு இடமளிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமேடைகளில் இதுபற்றிப் பேசுவதும், மாணவர்கள் இத்தகைய முறைகேடான வழிகளைப் பின்பற்றக்கூடாது என்று அறிவுரை வழங்குவதும் கடந்த சில வாரங்களாக அடிக்கடி பத்திரிகைகளில் தென்படும் செய்தியாக இருக்கிறது.
 
 
துணைவேந்தர்கள் இவ்வாறாகக் கூறினாலும், கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் சங்கத்தினர் சொல்லும் கருத்து நேர்மாறாக இருக்கிறது. இவ்வாறு பணம் கொடுத்து தேர்ச்சி மதிப்பெண் பெறுவது பல இடங்களில் அதிக அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று அவர்கள் சொல்கிறார்கள். கால் நூற்றாண்டுக்கு முன்பே இத்தகைய "பேப்பர் சேஸிங்' (விடைத்தாளைத் துரத்துதல்) பற்றிய பேச்சு இருக்கவே செய்தது. சில மாணவர்கள் தங்கள் விடைத்தாள்கள் எந்தப் பேராசிரியருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதை பல்கலைக்கழகத்தில் லஞ்சம் கொடுத்துத் தகவல் பெறுவதும், அதன் பின்னர் தங்களுக்கான டம்மி எண்களைப் பெற லஞ்சம் கொடுப்பதும், விடைத்தாள் திருத்தும் பேராசிரியர் வீட்டுக்கே போய், வாசலில் அழுது, கெஞ்சி அல்லது சேவகம் செய்து, எதற்கும் மனம் இரங்கவில்லை என்றால் பணத்தாசை காட்டி அந்தப் பேராசிரியரின் கருணையை எப்படியாவது பெற்று, பாஸ் மார்க் வாங்கி வருவது ஒரு கலையாகவே இருந்தது. அந்த அனுபவத்தை கொஞ்சம் இட்டுக்கட்டி கண் காது வைத்து சுவாரஸ்யமாகச் சொல்லும் தலைமுறையும் இருக்கவே செய்தது.
 
இப்போது அத்தகைய அனுபவங்களுக்கு அவசியமே இல்லை. ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் இதற்காக இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் உதவிப் பேராசிரியர்களாகவும் பேராசிரியர்களாகவும்கூட இருக்கிறார்கள். இன்றைய உயர் கல்வி உலகில் இத்தகைய முறைகேடுகள் பொறியியல் படிப்பில் மேலதிகமாக நடைபெறுகிறது என்பதுதான் உண்மை.
 
பல்கலைக்கழகங்களிலும், குறிப்பாக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் தனியார் பல்கலைக்கழகங்களிலும் இத்தகைய முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவோ, கண்காணிக்கவோ முறையான அமைப்புகள் இல்லை. அத்தகைய அமைப்புகள் இருந்தாலும் அவை வீணான ஒன்றாக ஒப்புக்கு இருக்கிறதே தவிர, அதனால் பயன் இருப்பதாகத் தெரியவில்லை.
 அரசு நடத்தும் கலந்தாய்வு மூலமும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழும் ஓர் ஆண்டுக்கு சுமார் ஒன்றரை லட்சம் பேர் பொறியியல் படிப்பில் சேருகிறார்கள். இவர்கள் அனைவரும் பொறியியல் படிப்பிற்கு மிக அத்தியாவசியமான உயர் கணிதத்தில் புலிகள் அல்ல. மேனிலைப் பள்ளியில் படிக்கும் முறை, பாடத்திட்டம் அனைத்துமே பொறியியல் கல்லூரிகளில் மாறிவிடுகிறது.
 
 
 உண்மையாகவே உயர் கணிதத்தில் புரிதல் இருக்கும் மாணவர்களால் மட்டுமே பொறியியல் கல்லூரியில் தொடர்ந்து நல்ல மதிப்பெண் பெற முடியும். பெற்றோர்களின் வறட்டு கௌரவத்துக்காகவும், ஏதோ பொறியியல் படிக்காவிட்டால் வருங்காலமே சூன்யமாகிவிடும் என்பது போன்ற தவறான கண்ணோட்டத்தினாலும் கணிதத்தில் பலவீனமாக இருந்தாலும் நன்கொடை கொடுத்தாவது பொறியியல் கல்லூரிகளில் சேர்பவர்கள் பலர். ஆகவேதான், பொறியியல் மாணவர்கள் பலருக்கும் அரியர்ஸ் அதிகமாக இருக்கிறது.
 
 
 பல லட்சம் செலவு செய்து படிக்க வைக்கும் பெற்றோரின் கோபத்துக்கு ஆளாகவும்கூடாது. அதே நேரத்தில் தேர்ச்சி பெற்றுவிடவும் வேண்டும் என்கின்ற கட்டாயம் அந்த மாணவர்களை எப்படியாகிலும், எந்தப் பொய்யைச் சொல்லியாவது பெற்றோரிடம் பணம் பெற்று அதைக்கொண்டு முறைகேடாகத் தேர்ச்சி பெறுவதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழியாக இருக்கிறது.
 
 
 அப்படியே மாணவர்கள் யோக்கியர்களாக இருந்தாலும் அவர்களது பெற்றோரும் அண்ணன் அக்கா போன்ற ரத்தஉறவுகளுமே இந்த முறைகேட்டில் இறங்கிவிடுகிறார்கள். படிப்புக்காக பல லட்சம் ரூபாய் செலவழித்துவிட்டதால் இன்னும் கொஞ்சம் செலவழித்து ஒரு பட்டம் வாங்கிவிட்டால் போதும், பிறகு இதேபோல பணத்தைக் கொடுத்து ஒரு வேலையும் வாங்கிவிடலாம் என்கின்ற "நம்பிக்கைவாதி'களாக இருக்கிறார்கள். இந்த இரண்டுக்கும் வழியில்லாமல், இதைத் தாங்கிக்கொள்ளும் சக்தியில்லாத மாணவர்களில் சிலர் தற்கொலை செய்துகொள்வதையும் பார்க்கிறோம்.
 
 
மாணவர்கள் எந்தப் பாடத்திட்டத்தைத் தேர்வு செய்வது என்பதை அவர்களிடம் விட்டுவிடும் நிலைமை உருவானால், இத்தகைய முறைகேடுகளில் 90 விழுக்காடு தானே மறைந்துபோகும். ஒரு மாணவர் தனக்குப் பிடித்தமான பாடத்திட்டத்தை எடுத்துப் படிக்கும்போது இத்தகைய பேப்பர் சேஸிங் என்கின்ற வேலைக்கே இடமில்லை. கல்லூரிக்கு மட்டம் போட்டு ஊர்சுற்றுவதும்கூட பிடிக்காத படிப்பினால்தான்.
 
 
கல்லூரி மாணவர்களைப் பொறுத்தவரை வெறும் 'அரியர்ஸ் கிளியர்' ஆகிவிட்டாலே போதும். ஆனால், பள்ளி மாணவர்கள் பெற்றோருக்காக மதிப்பெண் வாங்கிடப் படும்பாடு மிக மிக அதிகம். மாணவர்கள் விரும்பும் கல்வி என்பதை நாம் உருவாக்கவில்லை. நாம் உருவாக்கிய கல்வியை மாணவர்கள் படித்தாக வேண்டும் என்ற நிலைதான் இருக்கிறது.
 
கல்வித்துறைத் திணிப்பு ஒருபுறம், பெற்றோரின் திணிப்பு மறுபுறம். இந்த நிலை மாறினால் மட்டுமே, கல்வித்துறையில் ஊழல்கள் களையப்படுவது மட்டுமன்றி கல்வி தரமானதாகவும்,பயனுடையதாகவும் மாறப்போகிறது. சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க வேண்டிய நேரமிது.
 

இது டாடா நிறுவனம் காட்டுகிற வழி, கற்றுக் கொள்ள வேண்டிய ஜனநாயகப் பாடங்கள் அதிகம்.

தேர்தல் காலத்தில் கூட்டணி அமைப்பது போன்ற முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு அரசியல்வாதிகள் பொதுக்குழு, செயற்குழு என்று சம்பிரதாயத்திற்காகக் கூடி ‘தலைவருக்கு அதிகாரம் வழங்குகிறோம்’ என்று அடிமைச்சாசனம் எழுதிக் கொடுக்கிறார்கள். அவர்கள் டாடா நிறுவனத்திடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஜனநாயகப் பாடங்கள் அதிகம்.

தனக்கு அடுத்த தலைவர் இன்னார் என்று ரத்தன் டாடா சொல்லியிருந்தால், அவரை யாரும் கேள்வி கேட்பதற்கில்லை. இருந்தும், தலைமைப் பொறுப்புக்கு உரிய நபரைத் தேர்வு செய்வது பற்றிய விதிகளை உருவாக்கி, அவற்றைப் பின்பற்றி தனக்கு அடுத்த நபரை ஒரு குழுவின் மூலம் தேர்ந்தெடுத்து, அவரை ஒரு வருட காலம் தன்னுடன் சேர்ந்து பணியாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார். தொழில்துறை ஜனநாயகம் இது. கட்சிகளில் இந்த ஜனநாயகம் இல்லை.


ரசியல் ஒரு வியாபாரம் என்று விமர்சிப்பவர்களுக்கு, அரசியலைப் பற்றித் தெரிந்த அளவுக்கு வியாபாரத்தைப் பற்றித் தெரியவில்லை. நேர்மைக் குறைவினால் வியாபாரம் நொடிந்து விடுகிறது. நேர்மைக் குறைவினால் அரசியல் வளர்கிறது. ஒருமுறை ஏமாந்த வியாபாரியிடம் வாடிக்கையாளன் மறுமுறை ஏமாறுவதில்லை. ஆனால், வாக்காளர்கள் மாறி மாறி அரசியல் கட்சிகளிடம் ஏமாந்து போகிறார்கள்.

வியாபாரியின் முதலீடு – அவரது சொந்தப் பணம் அல்லது கடன். அரசியல்வாதியின் முதலீடு – அடுத்தவருடைய பணம். வியாபாரி, ஓடி ஆடிச் சம்பாதிக்கிறார். அரசியல்வாதி, இருந்த இடத்திலிருந்தே கறக்கிறார். செல்வாக்கான அரசியல்வாதி கட்சியில், ஆட்சியில் வெகு எளிதாகத் தன் வாரிசைப் புகுத்தி விடுகிறார். குடும்ப வியாபாரத்தில் பலர் அப்படிச் செய்வதில்லை. தம் வாரிசுகளைத் தொழிலதிபர்கள் நேரடியாக நிர்வாகத் தலைமைப் பொறுப்புகளில் நியமித்தால் அது தவறல்ல. அது அவர்கள் பணம்; அவர்கள் நிறுவனம்.

வாக்காளர்களைப் பற்றிக் கவலைப்படாத அரசியல்வாதிகளைப் போல் தொழிலதிபர்கள் நடந்து கொள்வதில்லை. நேருவுக்குப் பிறகு இந்திரா, இந்திராவுக்குப் பிறகு ராஜீவ், அவருக்குப் பிறகு முகமூடி சோனியா... என்று, தொழிலதிபர்கள் செயல்படுவதில்லை. பங்குதாரர்கள், பாகஸ்தர்கள், நிதி நிறுவனங்கள் இவற்றைப் பற்றி தொழில் நிறுவனங்கள் கவலைப்படுகின்றன. தலைமை நிர்வாகி தேர்வு சரியானபடி இருக்க வேண்டும். அதில் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை என்பதை பல தொழிலதிபர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அண்மையில் இதைச் செய்துள்ளவர் ரத்தன் டாடா.


ரத்தன் டாடா



ஜே.ஆர்.டி. டாடா

இந்திரா காந்தியும், மொரார்ஜி தேசாயும், ஜே.ஆர்.டி. டாடாவைப் படாதபாடு படுத்தினார்கள். இருந்தாலும் அவமானங்களையும், நஷ்டத்தையும் ஏற்றே தொழில் செய்தார் ஜே.ஆர்.டி. டாடா. தகுதிக்கு முதலிடம் கொடுத்துத் தொழில்முறை நிர்வாகிகளைத் தலைமைப் பொறுப்பில் நியமித்தார். ஒரு கட்டத்தில், அந்த நிர்வாகிகள் சிற்றரசர்களாகவே இருந்தார்கள். இது ஒருவித சர்வாதிகாரம் என்று தெரிந்தாலும், அவரவர் போக்கில் நிறுவனங்கள் வளரட்டும் என்று இருந்துவிட்டார்.

அவரை அடுத்து, ரத்தன் டாடா தலைமை ஏற்றபோது, நரசிம்மா ராவின் புதிய பொருளாதாரக் கொள்கை பிறந்தது. தொழில் துறைக்கு ஓரளவுக்கு நிர்வாக சுதந்திரம் கிடைத்தது. ஆனால், ஜே.ஆர்.டி.யின் காலத்தில் டாடா நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்த முதியவர்களைக் கழற்றி விட ரத்தன் டாடா சிரமப்பட்டார். டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவராக இருந்த ருஸ்ஸி மோடி எளிதில் பதவி விலகவில்லை. இந்த நிலையில், நிறுவனத்தில் பல நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து, புதிய தொழில்களில் இறங்கி சரிப்படாதவற்றை விற்று விட்டு, 1991 முதல் நிறுவனங்களை முன்னுக்குக் கொண்டு வந்த பெருமை ரத்தன் டாடாவுக்கு உண்டு.

ஜே.ஆர்.டி. டாடாவுக்கு இந்திரா காந்தியும், மொரார்ஜி தேசாயும்; ரத்தன் டாடாவுக்கு தயாநிதி மாறனும், மம்தா பானர்ஜியும். எல்லாவற்றையும் சமாளித்து வந்துள்ள ரத்தன் டாடா, அடுத்த வருடம் ஓய்வு பெறுகிறார். சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் ஐந்து நிபுணர்கள் கொண்ட தேர்வுக் குழுவை அமைத்து அவர்களிடம் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ உள்ள தகுதியான நபரைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமையைக் கொடுத்தார்.

அந்தக் குழு பலமுறை கூடிப் பலரை நேர்காணல் செய்தது. இறுதியில் ஒருமனதாக, சைரஸ் பி. மிஸ்திரி என்பவரைத் தேர்வு செய்தது. இவர் வெளி நபரல்ல. டாடா சன்ஸ் இயக்குனர் என்ற முறையில் இவரும் தேர்வுக் குழுவில் முதலில் இருந்தார். தன் பெயர் பரிசீலனையில் இருப்பதை அறிந்து, குழுவிலிருந்து விலகினார். பெப்சியின் இந்திரா நூயி உட்பட, சர்வதேசப் புகழ் பெற்ற பிரபல நிர்வாகிகளின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தும், வெளியே அதிகம் தெரிய வராத, டாடா தொழில் குடும்பத்தின் கட்டுமான நிறுவன நிர்வாக இயக்குனராக உள்ள 42 வயது சைரஸ் மிஸ்திரி, புதிய பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இவர் ஒரு வருட காலம் ரத்தன் டாடாவிடம் பயிற்சி பெறுவார்.

ஆதார் அட்டை – சர்வரோக நிவாரணியா?

‘ஆதார்’ என்கிற தேசிய அடையாள அட்டை வினியோகம் துவங்கி இருக்கிறது. எல்லா பிரச்சனைகளுக்கும் ஒற்றைத் தீர்வாக, சர்வரோக நிவாரணியாக இந்த அடையாள அட்டை இருக்கப் போகிறது என்ற அறிவிப்பால், ஆதார் அடையாள அட்டையைப் பெற பொதுமக்கள் அலைமோதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மிகப் பெரிய செலவில் - 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் – செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்கள் பெருகி வருகின்றன.

‘வளர்ந்த நாடுகளைப் போல இந்தியாவிலும், குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தனி அடையாள எண்களுடனும் கூடிய அடையாள அட்டைகளை வழங்க வேண்டும்’ என்று, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2001-ஆம் ஆண்டு அறிவித்தது. ‘தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டை உருவாக்க வேண்டும், இந்திய மக்கள் அனைவரும் அந்தப் பதிவேட்டில் தங்களைக் கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அந்தப் பதிவேட்டின் அடிப்படையில் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும்’ என்பது அன்றைய அரசின் முடிவு. சட்ட விரோதமான குடியேற்றத்தைத் தடுப்பது என்ற நோக்கத்துடன்தான் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்காக 1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தில் 2003 -ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, புதிய குடியுரிமை விதிகள் கொண்டு வரப்பட்டன.அதன்படி,

தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் பதிவு செய்வது கட்டாயம் என்றும், பதிவு செய்யப்பட்ட பெயர்களுக்கு தேசிய அடையாள எண் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், 2003-ஆம் ஆண்டு விதிகளில் மாற்றம் எதுவும் கொண்டு வரப்படாமலே பயோ மெட்ரிக் முறையும், தனிப்பட்ட தகவல்களைத் தர வேண்டும் என்ற நிர்பந்தமும் இப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

விரல் ரேகைப் பதிவுகள் மற்றும் கருவிழிப் பதிவுகள் போன்ற அடையாளங்களைப் பதிவு செய்யும் போதும், பிறகு சரிபார்க்கப்படும் போதும் தவறுகள் நிகழவே நிகழாது என்று எந்த நிச்சயமும் இல்லை. வளர்ந்த நாடுகள் பலவும் கூட பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்த முயன்று பின் கைவிட்டிருக்கின்றன. கடினமான உடல் உழைப்புத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், ரசாயனப் பொருட்களைக் கையாள்பவர்கள், சிறு வயதினர், முதியவர்களின் விரல் ரேகைகளைச் சரியாகப் பதிய முடியவில்லை என்று பல இடங்களில் புகார் வந்திருக்கிறது.

தவிர, விரல் ரேகை, கருவிழிப் பதிவுகள் எல்லாம் மாற்றமே இல்லாமல் ஒரே மாதிரி காலாகாலத்திற்கும் நிலைத்திருக்கக் கூடியவை அல்ல. உடல் நிலை, சுற்றுச்சூழல் இவற்றால் ஏற்படக் கூடிய மாற்றங்களுக்கு அவையும் உட்பட்டவையே. இந்த மாற்றங்கள் சிறிதாக இருந்தாலும், அடையாள அட்டையில் பதிவு செய்யப்பட்ட அடையாளங்களுடன் பிற்காலத்தில் அது ஒத்துப் போகாமல் நிராகரிக்கப்படும் அபாயம் இருக்கிறது.
தவிர, இப்போது ஆதார் அடையாள அட்டைக்காகத் திரட்டப்படும் தனிப்பட்ட தகவல்கள், ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்ற உத்திரவாதமும் இல்லை. அரசுக்கு கட்டணம் செலுத்தி விட்டு, இந்தத் தனிப்பட்ட தகவல்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு பற்றி ஆராய வேண்டும் என்று திட்டக் கமிஷனின் குழு ஒன்று 2006-ல் கருத்து தெரிவித்திருக்கிறது. தனி நபரின் ஒப்புதல் இல்லாமல் அவரது தனிப்பட்ட தகவல்களை பணத்திற்காக தனியார் நிறுவனங்களுக்குத் தருவது சட்டப்படி சரியா? அந்தத் தகவல்களை ஒரு வர்த்தகப் பொருளாக்குவதற்கு சமம் அல்லவா என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

மக்கள் தொகை விவரம் என்பது மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்புடையது. அது தொடர்பான தகவல்களைத் திரட்டுவதும், பாதுகாப்பதும் அந்தத் துறையைச் சார்ந்த ரெஜிஸ்ட்ரார் ஜெனரல் ஆஃப் இந்தியாவின் பொறுப்பில் உள்ளது. அந்த வகையில் தேசிய அடையாள அட்டையையும், தனி நபர் குறியீட்டு எண் வழங்குவதும் கூட மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்ததுதான். தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் அடிப்படையில் பயோ மெட்ரிக் அடையாள அட்டைகளை வழங்குவது என்று அரசு முடிவு செய்தபோது, அதற்காக உள்துறை அமைச்சகத்திற்கு தொழில்நுட்ப நிபுணத்துவம் அளிப்பதற்காக ‘யுனிக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டி’ என்ற அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
‘இன்ஃபோசிஸ்’ என்ற பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைத் துவக்கியவர்களில் ஒருவரான நந்தன் நிலேகணீயைத் தலைவராகக் கொண்டு அந்த அமைப்பு தொடங்கப்பட்டது. தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில், ஒரே நபர் ஒன்றுக்கும் அதிகமான முறை தன்னைப் பதிவு செய்து கொண்டிருந்தால், அந்தத் தவறுகளை நீக்கி, ஒவ்வொருவருக்கும் தனியான குறியீட்டு எண்ணை அந்த அமைப்பு வழங்கும். அந்த அமைப்பின் புள்ளி விவரங்கள் அனைத்தும் தனது பொறுப்பில் உள்ள, தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் ஒரு அம்சமாகிவிடும் என்று உள்துறை அமைச்சகம் 2008 வாக்கில் அறிவித்தது.

அதாவது, உள்துறை அமைச்சகத்தின் ஒரு அங்கமான ரெஜிஸ்ட்ரார் ஜெனரல் ஆஃப் இந்தியாவிடம் உள்ள இந்திய மக்கள் தொகைப் பதிவேட்டில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு தனிக் குறியீட்டு எண்ணை வழங்கும் நோக்கத்திற்காக, யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டி ஏற்படுத்தப்பட்டது. ஆனால், யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டி, உள்துறை அமைச்சகத்திற்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக செயல்படத் துவங்கி விட்டது. தனது நிதித் தேவைகளுக்காக நிதியமைச்சகத்தை நேரடியாக தொடர்பு கொள்கிறது. யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டியே அடையாள அட்டைகளை வழங்க முடிவு செய்தது. அரசும் முதல் கட்டமாக 20 கோடி அடையாள அட்டைகள் வழங்க அனுமதி அளித்தது. இதற்காக 3023 கோடி ரூபாய் வேறு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டி திரட்டும் தகவல்களின் நம்பகத் தன்மை குறித்து, உள்துறை மந்திரி ப.சிதம்பரம் சந்தேகத்தைக் கிளப்பி உள்ளார். 20 கோடி பேர்களிடம் மட்டுமே விரல் ரேகைப் பதிவு, கருவிழிப் பதிவு மற்றும் புகைப்படம் எடுப்பது ஆகியவற்றுக்காக 3000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டி செலவிடுவதைப் பற்றி திட்டக் கமிஷன் கேள்வி எழுப்பியுள்ளது. திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டியில் நடக்கும் குளறுபடிகள் குறித்து கவனிக்கும்படி உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டியின் செயல்பாடுகள் குறித்து, குறிப்பாக அதன் செலவினங்கள் குறித்து தணிக்கை செய்ய கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் துவங்கியுள்ளது. அதற்கு யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனினும் சி.ஏ.ஜி. அறிக்கை தரும்போது பல கேள்விகள் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அடையாள அட்டை குளறுபடிகள் !

புனேவைச் சேர்ந்த ஒருவருக்கு தனிக் குறியீட்டு எண் கொண்ட அடையாள அட்டை கிடைத்தது. அதில் அவரது புகைப்படத்திற்குப் பதில் அவரது மனைவியின் புகைப்படம் பதிவாகி இருந்தது. இதுபோல் ஆண்களைப் பெண்களாகவும், பெண்களை ஆண்களாகவும், குழந்தைகளைப் பெரியவர்களாகவும், பெரியவர்களை குழந்தைகளாகவும் பதிவு செய்துள்ள சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

* போலி ஆதார் அடையாள அட்டைகளை வழங்கியதாக, பெங்களூரில் ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

* ஆதார் அடையாள அட்டைக்காக தகவல்களைத் திரட்டிப் பதிவு செய்ய உரிமை வழங்குவதாக ஒரு நிறுவனம், ரூபாய் 2,50,000 வீதம் பல நிறுவனங்களிடம் பணம் திரட்டுவதாக யுனிக்ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டிக்குப் புகார்கள் வந்தன.

* தெற்கு மும்பையில் உள்ள Colaba-வைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களின் முகவரி மஹாராஷ்டிர மாநிலம் ரெய்கார் மாவட்டத்தில் உள்ள Kolaba என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

* குரூப் ஏ கெஸட்டட் அதிகாரி, தனது லெட்டர் ஹெட்டில் சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படத்தை ஒட்டி சான்று அளித்தால், அதை ஆதார் அடையாள அட்டைக்காக பதிவு செய்து கொள்ள பயன்படும் ஆவணங்களில் ஒன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பெங்களூர் திலக் நகரில் உள்ள மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு டாக்டர், ஒரு சான்றிதழுக்கு நூறு ரூபாய் கட்டணம் என்ற முறையில் கையெழுத்திட்டு, சம்பந்தப்பட்ட நபர்களை கண்களால் கூட பார்க்காமல் இடைத்தரகர் மூலம் சான்றிதழ் தந்தது தெரிய வந்தது.


* ரேஷன் அட்டையில் தொடங்கி, வங்கியில் கணக்கு தொடங்குவது வரை எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே அடையாளமாக, ஆதார் அடையாள அட்டை இருக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆதார் அடையாள அட்டையை வங்கிகள் ஆதார ஆவணப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று 2010-ல் அரசு அறிவித்தது. ஆனால், 2011 செப்டம்பரில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் ஆதார் அடையாள அட்டையின் அடிப்படையில் துவக்கப்படும் கணக்குகளுக்கும் கூட, வாடிக்கையாளர்களிடம் இருந்து இருப்பிடச் சான்றிதழைப் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறது. 

ஒரு வளமான எதிர்காலத்தை நோக்கி.?!