Total Pageviews

Saturday, 3 December 2011

இது டாடா நிறுவனம் காட்டுகிற வழி, கற்றுக் கொள்ள வேண்டிய ஜனநாயகப் பாடங்கள் அதிகம்.

தேர்தல் காலத்தில் கூட்டணி அமைப்பது போன்ற முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு அரசியல்வாதிகள் பொதுக்குழு, செயற்குழு என்று சம்பிரதாயத்திற்காகக் கூடி ‘தலைவருக்கு அதிகாரம் வழங்குகிறோம்’ என்று அடிமைச்சாசனம் எழுதிக் கொடுக்கிறார்கள். அவர்கள் டாடா நிறுவனத்திடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஜனநாயகப் பாடங்கள் அதிகம்.

தனக்கு அடுத்த தலைவர் இன்னார் என்று ரத்தன் டாடா சொல்லியிருந்தால், அவரை யாரும் கேள்வி கேட்பதற்கில்லை. இருந்தும், தலைமைப் பொறுப்புக்கு உரிய நபரைத் தேர்வு செய்வது பற்றிய விதிகளை உருவாக்கி, அவற்றைப் பின்பற்றி தனக்கு அடுத்த நபரை ஒரு குழுவின் மூலம் தேர்ந்தெடுத்து, அவரை ஒரு வருட காலம் தன்னுடன் சேர்ந்து பணியாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார். தொழில்துறை ஜனநாயகம் இது. கட்சிகளில் இந்த ஜனநாயகம் இல்லை.


ரசியல் ஒரு வியாபாரம் என்று விமர்சிப்பவர்களுக்கு, அரசியலைப் பற்றித் தெரிந்த அளவுக்கு வியாபாரத்தைப் பற்றித் தெரியவில்லை. நேர்மைக் குறைவினால் வியாபாரம் நொடிந்து விடுகிறது. நேர்மைக் குறைவினால் அரசியல் வளர்கிறது. ஒருமுறை ஏமாந்த வியாபாரியிடம் வாடிக்கையாளன் மறுமுறை ஏமாறுவதில்லை. ஆனால், வாக்காளர்கள் மாறி மாறி அரசியல் கட்சிகளிடம் ஏமாந்து போகிறார்கள்.

வியாபாரியின் முதலீடு – அவரது சொந்தப் பணம் அல்லது கடன். அரசியல்வாதியின் முதலீடு – அடுத்தவருடைய பணம். வியாபாரி, ஓடி ஆடிச் சம்பாதிக்கிறார். அரசியல்வாதி, இருந்த இடத்திலிருந்தே கறக்கிறார். செல்வாக்கான அரசியல்வாதி கட்சியில், ஆட்சியில் வெகு எளிதாகத் தன் வாரிசைப் புகுத்தி விடுகிறார். குடும்ப வியாபாரத்தில் பலர் அப்படிச் செய்வதில்லை. தம் வாரிசுகளைத் தொழிலதிபர்கள் நேரடியாக நிர்வாகத் தலைமைப் பொறுப்புகளில் நியமித்தால் அது தவறல்ல. அது அவர்கள் பணம்; அவர்கள் நிறுவனம்.

வாக்காளர்களைப் பற்றிக் கவலைப்படாத அரசியல்வாதிகளைப் போல் தொழிலதிபர்கள் நடந்து கொள்வதில்லை. நேருவுக்குப் பிறகு இந்திரா, இந்திராவுக்குப் பிறகு ராஜீவ், அவருக்குப் பிறகு முகமூடி சோனியா... என்று, தொழிலதிபர்கள் செயல்படுவதில்லை. பங்குதாரர்கள், பாகஸ்தர்கள், நிதி நிறுவனங்கள் இவற்றைப் பற்றி தொழில் நிறுவனங்கள் கவலைப்படுகின்றன. தலைமை நிர்வாகி தேர்வு சரியானபடி இருக்க வேண்டும். அதில் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை என்பதை பல தொழிலதிபர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அண்மையில் இதைச் செய்துள்ளவர் ரத்தன் டாடா.


ரத்தன் டாடா



ஜே.ஆர்.டி. டாடா

இந்திரா காந்தியும், மொரார்ஜி தேசாயும், ஜே.ஆர்.டி. டாடாவைப் படாதபாடு படுத்தினார்கள். இருந்தாலும் அவமானங்களையும், நஷ்டத்தையும் ஏற்றே தொழில் செய்தார் ஜே.ஆர்.டி. டாடா. தகுதிக்கு முதலிடம் கொடுத்துத் தொழில்முறை நிர்வாகிகளைத் தலைமைப் பொறுப்பில் நியமித்தார். ஒரு கட்டத்தில், அந்த நிர்வாகிகள் சிற்றரசர்களாகவே இருந்தார்கள். இது ஒருவித சர்வாதிகாரம் என்று தெரிந்தாலும், அவரவர் போக்கில் நிறுவனங்கள் வளரட்டும் என்று இருந்துவிட்டார்.

அவரை அடுத்து, ரத்தன் டாடா தலைமை ஏற்றபோது, நரசிம்மா ராவின் புதிய பொருளாதாரக் கொள்கை பிறந்தது. தொழில் துறைக்கு ஓரளவுக்கு நிர்வாக சுதந்திரம் கிடைத்தது. ஆனால், ஜே.ஆர்.டி.யின் காலத்தில் டாடா நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்த முதியவர்களைக் கழற்றி விட ரத்தன் டாடா சிரமப்பட்டார். டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவராக இருந்த ருஸ்ஸி மோடி எளிதில் பதவி விலகவில்லை. இந்த நிலையில், நிறுவனத்தில் பல நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து, புதிய தொழில்களில் இறங்கி சரிப்படாதவற்றை விற்று விட்டு, 1991 முதல் நிறுவனங்களை முன்னுக்குக் கொண்டு வந்த பெருமை ரத்தன் டாடாவுக்கு உண்டு.

ஜே.ஆர்.டி. டாடாவுக்கு இந்திரா காந்தியும், மொரார்ஜி தேசாயும்; ரத்தன் டாடாவுக்கு தயாநிதி மாறனும், மம்தா பானர்ஜியும். எல்லாவற்றையும் சமாளித்து வந்துள்ள ரத்தன் டாடா, அடுத்த வருடம் ஓய்வு பெறுகிறார். சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் ஐந்து நிபுணர்கள் கொண்ட தேர்வுக் குழுவை அமைத்து அவர்களிடம் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ உள்ள தகுதியான நபரைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமையைக் கொடுத்தார்.

அந்தக் குழு பலமுறை கூடிப் பலரை நேர்காணல் செய்தது. இறுதியில் ஒருமனதாக, சைரஸ் பி. மிஸ்திரி என்பவரைத் தேர்வு செய்தது. இவர் வெளி நபரல்ல. டாடா சன்ஸ் இயக்குனர் என்ற முறையில் இவரும் தேர்வுக் குழுவில் முதலில் இருந்தார். தன் பெயர் பரிசீலனையில் இருப்பதை அறிந்து, குழுவிலிருந்து விலகினார். பெப்சியின் இந்திரா நூயி உட்பட, சர்வதேசப் புகழ் பெற்ற பிரபல நிர்வாகிகளின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தும், வெளியே அதிகம் தெரிய வராத, டாடா தொழில் குடும்பத்தின் கட்டுமான நிறுவன நிர்வாக இயக்குனராக உள்ள 42 வயது சைரஸ் மிஸ்திரி, புதிய பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இவர் ஒரு வருட காலம் ரத்தன் டாடாவிடம் பயிற்சி பெறுவார்.

No comments:

Post a Comment