Total Pageviews

Saturday, 3 December 2011

ஆதார் அட்டை – சர்வரோக நிவாரணியா?

‘ஆதார்’ என்கிற தேசிய அடையாள அட்டை வினியோகம் துவங்கி இருக்கிறது. எல்லா பிரச்சனைகளுக்கும் ஒற்றைத் தீர்வாக, சர்வரோக நிவாரணியாக இந்த அடையாள அட்டை இருக்கப் போகிறது என்ற அறிவிப்பால், ஆதார் அடையாள அட்டையைப் பெற பொதுமக்கள் அலைமோதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மிகப் பெரிய செலவில் - 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் – செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்கள் பெருகி வருகின்றன.

‘வளர்ந்த நாடுகளைப் போல இந்தியாவிலும், குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தனி அடையாள எண்களுடனும் கூடிய அடையாள அட்டைகளை வழங்க வேண்டும்’ என்று, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2001-ஆம் ஆண்டு அறிவித்தது. ‘தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டை உருவாக்க வேண்டும், இந்திய மக்கள் அனைவரும் அந்தப் பதிவேட்டில் தங்களைக் கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அந்தப் பதிவேட்டின் அடிப்படையில் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும்’ என்பது அன்றைய அரசின் முடிவு. சட்ட விரோதமான குடியேற்றத்தைத் தடுப்பது என்ற நோக்கத்துடன்தான் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்காக 1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தில் 2003 -ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, புதிய குடியுரிமை விதிகள் கொண்டு வரப்பட்டன.அதன்படி,

தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் பதிவு செய்வது கட்டாயம் என்றும், பதிவு செய்யப்பட்ட பெயர்களுக்கு தேசிய அடையாள எண் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், 2003-ஆம் ஆண்டு விதிகளில் மாற்றம் எதுவும் கொண்டு வரப்படாமலே பயோ மெட்ரிக் முறையும், தனிப்பட்ட தகவல்களைத் தர வேண்டும் என்ற நிர்பந்தமும் இப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

விரல் ரேகைப் பதிவுகள் மற்றும் கருவிழிப் பதிவுகள் போன்ற அடையாளங்களைப் பதிவு செய்யும் போதும், பிறகு சரிபார்க்கப்படும் போதும் தவறுகள் நிகழவே நிகழாது என்று எந்த நிச்சயமும் இல்லை. வளர்ந்த நாடுகள் பலவும் கூட பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்த முயன்று பின் கைவிட்டிருக்கின்றன. கடினமான உடல் உழைப்புத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், ரசாயனப் பொருட்களைக் கையாள்பவர்கள், சிறு வயதினர், முதியவர்களின் விரல் ரேகைகளைச் சரியாகப் பதிய முடியவில்லை என்று பல இடங்களில் புகார் வந்திருக்கிறது.

தவிர, விரல் ரேகை, கருவிழிப் பதிவுகள் எல்லாம் மாற்றமே இல்லாமல் ஒரே மாதிரி காலாகாலத்திற்கும் நிலைத்திருக்கக் கூடியவை அல்ல. உடல் நிலை, சுற்றுச்சூழல் இவற்றால் ஏற்படக் கூடிய மாற்றங்களுக்கு அவையும் உட்பட்டவையே. இந்த மாற்றங்கள் சிறிதாக இருந்தாலும், அடையாள அட்டையில் பதிவு செய்யப்பட்ட அடையாளங்களுடன் பிற்காலத்தில் அது ஒத்துப் போகாமல் நிராகரிக்கப்படும் அபாயம் இருக்கிறது.
தவிர, இப்போது ஆதார் அடையாள அட்டைக்காகத் திரட்டப்படும் தனிப்பட்ட தகவல்கள், ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்ற உத்திரவாதமும் இல்லை. அரசுக்கு கட்டணம் செலுத்தி விட்டு, இந்தத் தனிப்பட்ட தகவல்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு பற்றி ஆராய வேண்டும் என்று திட்டக் கமிஷனின் குழு ஒன்று 2006-ல் கருத்து தெரிவித்திருக்கிறது. தனி நபரின் ஒப்புதல் இல்லாமல் அவரது தனிப்பட்ட தகவல்களை பணத்திற்காக தனியார் நிறுவனங்களுக்குத் தருவது சட்டப்படி சரியா? அந்தத் தகவல்களை ஒரு வர்த்தகப் பொருளாக்குவதற்கு சமம் அல்லவா என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

மக்கள் தொகை விவரம் என்பது மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்புடையது. அது தொடர்பான தகவல்களைத் திரட்டுவதும், பாதுகாப்பதும் அந்தத் துறையைச் சார்ந்த ரெஜிஸ்ட்ரார் ஜெனரல் ஆஃப் இந்தியாவின் பொறுப்பில் உள்ளது. அந்த வகையில் தேசிய அடையாள அட்டையையும், தனி நபர் குறியீட்டு எண் வழங்குவதும் கூட மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்ததுதான். தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் அடிப்படையில் பயோ மெட்ரிக் அடையாள அட்டைகளை வழங்குவது என்று அரசு முடிவு செய்தபோது, அதற்காக உள்துறை அமைச்சகத்திற்கு தொழில்நுட்ப நிபுணத்துவம் அளிப்பதற்காக ‘யுனிக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டி’ என்ற அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
‘இன்ஃபோசிஸ்’ என்ற பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைத் துவக்கியவர்களில் ஒருவரான நந்தன் நிலேகணீயைத் தலைவராகக் கொண்டு அந்த அமைப்பு தொடங்கப்பட்டது. தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில், ஒரே நபர் ஒன்றுக்கும் அதிகமான முறை தன்னைப் பதிவு செய்து கொண்டிருந்தால், அந்தத் தவறுகளை நீக்கி, ஒவ்வொருவருக்கும் தனியான குறியீட்டு எண்ணை அந்த அமைப்பு வழங்கும். அந்த அமைப்பின் புள்ளி விவரங்கள் அனைத்தும் தனது பொறுப்பில் உள்ள, தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் ஒரு அம்சமாகிவிடும் என்று உள்துறை அமைச்சகம் 2008 வாக்கில் அறிவித்தது.

அதாவது, உள்துறை அமைச்சகத்தின் ஒரு அங்கமான ரெஜிஸ்ட்ரார் ஜெனரல் ஆஃப் இந்தியாவிடம் உள்ள இந்திய மக்கள் தொகைப் பதிவேட்டில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு தனிக் குறியீட்டு எண்ணை வழங்கும் நோக்கத்திற்காக, யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டி ஏற்படுத்தப்பட்டது. ஆனால், யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டி, உள்துறை அமைச்சகத்திற்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக செயல்படத் துவங்கி விட்டது. தனது நிதித் தேவைகளுக்காக நிதியமைச்சகத்தை நேரடியாக தொடர்பு கொள்கிறது. யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டியே அடையாள அட்டைகளை வழங்க முடிவு செய்தது. அரசும் முதல் கட்டமாக 20 கோடி அடையாள அட்டைகள் வழங்க அனுமதி அளித்தது. இதற்காக 3023 கோடி ரூபாய் வேறு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டி திரட்டும் தகவல்களின் நம்பகத் தன்மை குறித்து, உள்துறை மந்திரி ப.சிதம்பரம் சந்தேகத்தைக் கிளப்பி உள்ளார். 20 கோடி பேர்களிடம் மட்டுமே விரல் ரேகைப் பதிவு, கருவிழிப் பதிவு மற்றும் புகைப்படம் எடுப்பது ஆகியவற்றுக்காக 3000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டி செலவிடுவதைப் பற்றி திட்டக் கமிஷன் கேள்வி எழுப்பியுள்ளது. திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டியில் நடக்கும் குளறுபடிகள் குறித்து கவனிக்கும்படி உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டியின் செயல்பாடுகள் குறித்து, குறிப்பாக அதன் செலவினங்கள் குறித்து தணிக்கை செய்ய கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் துவங்கியுள்ளது. அதற்கு யுனீக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனினும் சி.ஏ.ஜி. அறிக்கை தரும்போது பல கேள்விகள் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அடையாள அட்டை குளறுபடிகள் !

புனேவைச் சேர்ந்த ஒருவருக்கு தனிக் குறியீட்டு எண் கொண்ட அடையாள அட்டை கிடைத்தது. அதில் அவரது புகைப்படத்திற்குப் பதில் அவரது மனைவியின் புகைப்படம் பதிவாகி இருந்தது. இதுபோல் ஆண்களைப் பெண்களாகவும், பெண்களை ஆண்களாகவும், குழந்தைகளைப் பெரியவர்களாகவும், பெரியவர்களை குழந்தைகளாகவும் பதிவு செய்துள்ள சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

* போலி ஆதார் அடையாள அட்டைகளை வழங்கியதாக, பெங்களூரில் ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

* ஆதார் அடையாள அட்டைக்காக தகவல்களைத் திரட்டிப் பதிவு செய்ய உரிமை வழங்குவதாக ஒரு நிறுவனம், ரூபாய் 2,50,000 வீதம் பல நிறுவனங்களிடம் பணம் திரட்டுவதாக யுனிக்ஐடென்டிஃபிகேஷன் அதாரிட்டிக்குப் புகார்கள் வந்தன.

* தெற்கு மும்பையில் உள்ள Colaba-வைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களின் முகவரி மஹாராஷ்டிர மாநிலம் ரெய்கார் மாவட்டத்தில் உள்ள Kolaba என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

* குரூப் ஏ கெஸட்டட் அதிகாரி, தனது லெட்டர் ஹெட்டில் சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படத்தை ஒட்டி சான்று அளித்தால், அதை ஆதார் அடையாள அட்டைக்காக பதிவு செய்து கொள்ள பயன்படும் ஆவணங்களில் ஒன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பெங்களூர் திலக் நகரில் உள்ள மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு டாக்டர், ஒரு சான்றிதழுக்கு நூறு ரூபாய் கட்டணம் என்ற முறையில் கையெழுத்திட்டு, சம்பந்தப்பட்ட நபர்களை கண்களால் கூட பார்க்காமல் இடைத்தரகர் மூலம் சான்றிதழ் தந்தது தெரிய வந்தது.


* ரேஷன் அட்டையில் தொடங்கி, வங்கியில் கணக்கு தொடங்குவது வரை எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே அடையாளமாக, ஆதார் அடையாள அட்டை இருக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆதார் அடையாள அட்டையை வங்கிகள் ஆதார ஆவணப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று 2010-ல் அரசு அறிவித்தது. ஆனால், 2011 செப்டம்பரில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் ஆதார் அடையாள அட்டையின் அடிப்படையில் துவக்கப்படும் கணக்குகளுக்கும் கூட, வாடிக்கையாளர்களிடம் இருந்து இருப்பிடச் சான்றிதழைப் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறது. 

ஒரு வளமான எதிர்காலத்தை நோக்கி.?!

No comments:

Post a Comment